பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 557

            154
அறமே புகுதுக வருளே புகுதுகத்
திறமே புகுதுகத் தெளிநூல் புகுதுகப்
புறமே மொழிநல மெவையும் புகுதுக
வுறவே யெனநக ரெதிர்கொண் டுறுமுமே.
 
"அறமே புகுதுக, அருளே புகுதுக,
திறமே புகுதுக, தெளிநூல் புகுதுக,
புறமே மொழி நலம் எவையும் புகுதுக
உறவே!" என, நகர் எதிர்கொண்டு, உறுமுமே.

      நாசரெத்து நகரம் இவர்களை எதிர்கொண்டு, "புண்ணியம் உடன்
வந்து புகுமாறும், தெய்வ அருள் வந்து புகுமாறும், ஊக்கம் வந்து புகுமாறும்,
தெளிந்த வேத நூல் வந்து புகுமாறும், இவற்றின் புறத்தே சொல்லாது ஒழிந்த
எல்லா நலங்களும் வந்து புகுமாறும் நீவீர் இந்நகருள் வருக!" என்று
முழங்கும்.

 
                  155
வளைகொள் ளொலியெழ உயிர்கொள் ளொலியெழத்
துளைகொள் குழலொடு தொனியா ழொலியெழ
வுளைகொள் ழுரசொடு பலவு மொலியெழ
விளைகொள் ளொலிநக ரெதிர்கொண் டுறுமுமே.
 

வளை கொள் ஒலி எழ, வயிர் கொள் ஒலி எழ,
துளை கொள் குழலொடு தொனி யாழ் ஒலி எழ,
உளை கொள் முரசொடு பலவும் ஒலி எழ,
இளை கொள் ஒலிநகர் எதிர்கொண்டு, உறுமுமே.


     காவற்காடு சூழக் கொண்டு இயல்பாகவே ஒலி மிக்க அந்நகர்
இவர்களை எதிர்கொண்டு, சங்கினிடத்து அமைந்த ஒலி எழவும், ஊது
கொம்பினிடத்து அமைந்த ஒலி எழவும், துளை கொண்ட புல்லாங்குழலோடு
இனிய தொனியுள்ள யாழின் ஒலி எழவும், அழைக்கும் தன்மை கொண்ட
முரசோடு பிற பல இசைக் கருவிகளின் ஒலி எழவும் முழங்கும்.