பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 558

              156
துன்னுந் திரையலை தொனியே யொழிதர
மின்னுங் கருமுகி லொலியே மெலிதரப்
பொன்னுங் கெழுமணிப் பொலிவுங் கிளைகட
லென்னுந் திருநக ரெதிர்கொண் டுறுமுமே.
 
ன்னும் திரை அலை தொனியே ஒழி தர,
மின்னும் கரு முகில் ஒலியே மெலி தர,
பொன்னும் கெழு மணிப் பொலிவும் கிளை கடல்
என்னும் திருநகர் எதிர் கொண்டு உறுமுமே.

     பொன்னும் நிறைந்த மாணிக்கங்களின் பொலிவும் கிளைத்து வளரும்
கடல் என்னத்தக்க அத் திருநகர் இவர்களை எதிர்கொண்டு, திரைகள்
நெருங்கிச்செறியும் கடலின் ஒலி நிகரற்று ஒழியவும், மின்னும் கரிய
மேகத்தின் இடியொலியும் மெலியவும் முழங்கும்.

 
              157
கானீர் மலர்வனங் காய்ந்தா லெனமுனர்
நாநீ ரழுதுக நம்மைப் பிரிதரப்
போனீர் மெலிபயிர் போற்றுந் துளியென
வானீ ரருளிட வந்தீ ருயிரென.
 
"கான் நீர் மலர் வனம் காய்ந்தால் என, முனர்
நாம் நீர் அழுது உக நம்மைப் பிரிதரப்
போனீர்; மெலி பயிர் போற்றும் துளி என,
வான் நீர் அருளிட வந்தீர் உயிர் என!

     "மணம் கொண்ட நீர் வளம் மிக்க மலர்ச்சோலை காய்ந்தாற் போல,
நாங்கள் அழுது கண்ணீர் சொரியுமாறு முன்னே எங்களைப் பிரியவிட்டுப்
போனீர்கள்; இப்பொழுது, வாடிய பயிரைக் காக்க வரும் மழைத்துளி போல,
எங்களுக்கு உயிர் போல் வானுலகிற்கு உரிய வரங்களை அருளுமாறு வந்து
சேர்ந்தீர்கள்! இப்பாடல், பொருள் தொடர்ந்து, 160-ம் பாடலில், 'என்றே
புகழுவார்' என்பதனோடு முடிவு பெறும்.