பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 559

           158
எரிசேர் சுரவழி யெஞ்சா மதமிழி
கரிசேர் மலைவழி காவா துயிரடும்
வரிசேர் வனவழி வந்தே மெலிவில
புரிசே ருமதடி கண்டேம் பொலிவுற.
 
"எரி சேர் சுர வழி, எஞ்சா மதம் இழி
கரி சேர் மலை வழி, காவாது உயிர் அடும்
வரி சேர் வன வழி வந்தே, மெலிவு இல
புரி சேர் உமது அடி கண்டோம் பொலிவு உற.

     நெருப்புப் போல வெயில் எரிக்கும் பாலைவன வழியாகவும்,
இடைவிடாமல் மதம் பொழியும் யானைகள் நிறைந்த மலை வழியாகவும்,
காப்பதற்கு இயலாத தன்மையாய் உயிரைக் கொல்லும் புலிகள் நிறைந்த
காட்டு வழியாகவும் வந்து, துன்பங்களால் மெலிதலின்றி, பொலிவோடு
இந்நகர் வந்து சேரும் உங்கள் அடிகளைக் காணும் பேறு பெற்றோம்!

 
              159
பண்டேர் மொழியுறப் பன்மா பணிவன
கண்டே ரழகுறக் காய்கான் மலர்வன
மண்டே ருமதடி வந்தே வடுவில
வெண்டே ரொழுகிடம் விண்ணோ ரொழுகுவார்.
 
"பண் தேர் மொழி உற, பல் மா பணிவன;
கண் தேர் அழகு உற, காய் கான் மலர்வன;
மண் தேர் உமது அடி வந்தே, வடு இல,
வெண் தேர் ஒழுகு இடம் விண்ணோர் ஒழுகுவார்.

      யாழ் ஒலியினும் சிறந்த உங்கள் வாய் மொழியைக் கேட்டதுமே,
பலவகை விலங்குகளும் பணியும்; கண்கள் தேடத்தக்க உங்கள் அழகைக்
கண்டதுமே, வெப்பம் மிகுந்த பாலைவனமும் பூத்துக் குலுங்கும்;
மண்ணுலகம் தேடத்தக்க உங்கள் அடிகள் பட்டதுமே, பாவங்களெல்லாம்
அழிய, பேய்த்தேர் ஓடும் இடமெல்லாம் வானவர் உடன்வந்து நடப்பர்!

     வெண் தேர்; பேய்த் தேர்; தேர் போலத் தோன்றி மறையும்
கானல் நீர்.