பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 56

      ''கடல் சூழ்ந்த இந்நிலவுலகம் முழுவதும் களித்து இனிதே வாழ
வென்று இங்கு வந்துதித்த உடல் கொண்ட கடவுளை ஒழிக்க வேண்டு
மென்று பகைத்த எரோத மன்னன் வலிமை பொருந்திய தன் நாடு மட்டும்
அப்பயனிற் குறைபடுதலே தான் கண்ட பெரும் பயனோ? பகைவரது
ஆலோசனையெல்லாம் ஆண்டவனின் வலிமைத் திறத்தின் முன்னே என்ன
ஆகும்?'' என்று அவர்கள் கூறினர்.

      ஒழிக்குப - ஒழிக்க என்ற வினையெச்சம் விரிந்து நின்றது.

 
             89
கொழுமலர்ப் பள்ளிப் பார்ப்புக்
     கொடியபுள் பறிப்ப வன்ன
மழுமலர்த் தடமொத் தந்நாட்
     டன்னைமா ரழுநோய்க் கேங்கிச்
செழுமலர்க் கொடிக ளீன்ற
     தேன்முகை முகிழா முன்ன
ரெழுமலர்ப் பகைக்கான் முன்பட்
     டெனமகர்க் கிரங்கி நொந்தார்.
 
கொழு மலர்ப் பள்ளிப் பார்ப்புக் கொடிய புள் பறிப்ப அன்னம்
அழும் மலர்த் தடம் ஒத்து அந்நாட்டு அன்னைமார் அழு
                                        நோய்க்கு ஏங்கி,
செழு மலர்க் கொடிகள் ஈன்ற தேன் முகை முகிழா முன்னர்
எழு மலர்ப் பகைக் கால்முன் பட்டென மகர்க்கு இரங்கி நொந்தார்.

      காழுமையான தாமரை மலராகிய படுக்கையிற் கிடந்த தம்
குஞ்சுகளைக் கொடிய பறவைகள் பறித்துச் செல்ல அன்னங்கள் அழுகின்ற
மலர்த் தடாகம் போன்று அந்நாட்டுத் தாய்மார் அழும் துன்பத்தை
நினைந்து ஏங்கியும், செழுமையான மலர்க் கொடிகள் ஈன்ற தேன் நிறைந்த
அரும்புகள் மலர்வதன் முன்னர் எழும் மலர்க்குப் பகையாகிய காற்றின்முன்
பட்டதுபோல் மாண்ட புதல்வர்கட்கு இரங்கியும் மரியாளும் சூசையும்
வருந்தினர்.

      
கொடிய புள் - பருந்து, கழுகு போன்ற பறவைகள்.