பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 561

முப்பத்தோராவது
 

பிரிந்த மகவைக் காண் படலம்
 


     தம்மை விட்டுப் பிரிந்த சிறுவன் இயேசுவை மரியாளும்
சூசையும் தேடிக் கண்டதைக் கூறும் பகுதி.

                   எருசலேம் பயணம

     - மா, கூவிளம், - விளம், - விளம், - மா

 
                1
ஆழி சூழுல கனைத்திலு மாழியொன் றுருட்டி
வாழி யாவரும் வளம்பெறத் தோன்றிய நாத
னேழி யாக்கையோ டீங்கிரு மருளெழுந் தன்மை
சூழி யாப்புள தொடையினு ளியாப்புறு பாலோ.
 

ஆழி சூழ் உலகு அனைத்திலும் ஆழி ஒன்று உருட்டி,
வாழ் யாவரும் வளம் பெறத் தோன்றிய நாதன்,
ஏழ் யாக்கையோடு ஈங்கு, இரும் அருள் எழும் தன்மை
சூழ் யாப்பு உள தொடையினுள் யாப்பு உறும் பாலோ?

 

     கடல் சூழ்ந்த உலகம் முழுவதிலும் தனது ஆணைச் சக்கரம்
ஒன்றையே செலுத்தி, அதன் மூலம் இவ்வுலகில் வாழும் மனிதர் யாவரும்
ஆன்ம நலம் பெறுமாறு பிறந்த குழந்தைநாதன், இவ்வுலகில் வயதால்
வளர்ந்த தனது உடலோடு, மிக்க அருளிலும் வளர்ந்து வந்த தன்மை,
என்போன்றார் கருதி அமைக்கும் யாப்பு நெறிப்பட்ட செய்யுளினுள்
கட்டுப்படும் தன்மையதோ?

     வாழ் + யாவரும், ஏழ் + யாக்கை, சூழ் + யாப்பு, உள் + யாப்பு
என்ற இடங்களில், யகரப் புணர்ச்சியில் இடையே குற்றியலிகரம் தோன்றியது.

 
                   2
வளிகொண் டோடிய மரக்கலம் போயின வழியுங்
களிகொண் டோதிமங் ககனமேற் பறந்தன வழியு
முளிகொண் டோதினு முலகிடை வதிந்தநா ணாத
னளிகொண் டோகையி லயர்ந்தவை யடைந்தவ ருண்டோ.