பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 562

வளி கொண்டு ஓடிய மரக்கலம் போயின வழியும்,
களி கொண்டு ஓதிமம் ககன மேல் பறந்தன வழியும்
உளி கொண்டு ஓதினும், உலகு இடை வதிந்த நாள் நாதன்,
அளி கொண்டு, ஒகையில் அயர்ந்தவை அடைந்தவர் உண்டோ?


     காற்றின் துணை கொண்டு கப்பல் நீரில் சென்ற தடத்தையும்,
அன்னப் பறவை மகிழ்ச்சி கொண்டு வானத்தில் பறந்து சென்ற தடத்தையும்,
இவ்விடம் என்று கொண்டு கூறிவிடலாமாயினும், அக்குழந்தை நாதன்
இவ்வுலகில் தங்கியிருந்த காலத்தில், கருணை கொண்டு, மகிழ்ச்சியோடு
செய்தவற்றைத் தம் அறிவால் அடையப் பெற்றவர் உண்டோ?

     ஓகை என்பது உவகை என்பதின் போலி. 'மரக்கலம் போயின வழி'
'ஓதிமம் பறந்தன வழி' இவ்வுவமைகள் வந்துள்ள இடம் ஞானாகமம்,
5 : 10 - 11.

 
                    3
மதியெ ழுந்ததாண் மடந்தையு மலர்க்கொடித் தவனுங்
கதியெ ழுந்தவான் கணங்களு மன்றியீங் குண்டோ
நிதியெ ழுந்தமே னிலநிகர் சிறந்தவம் மனையின்
பதியெ ழுந்தகா லாயவை கண்ணிய பாலார்.
 
மதி எழுந்த தாள் மடந்தையும், மலர்க் கொடித் தவனும்,
கதி எழுந்த வான் கணங்களும் அன்றி, ஈங்கு உண்டோ,
நிதி எழுந்த மேல் நிலம் நிகர் சிறந்த அம் மனையின்
பதி எழுந்த கால் ஆயவை கண்ணிய பாலார்?

     பொன் நிறைந்த மேலுலகத்திற்கு நிகராகச் சிறந்து விளங்கிய அந்தச்
சிறுமனையில் குழந்தை நாதன் பதிந்து குடிகொண்ட நாளில்
நிகழ்ந்தவற்றையெல்லாம் கருதி உணர்ந்த இயல்பு கொண்டோர், நிலவின்மீது
எழுந்து நின்ற கால்களைக் கொண்ட மங்கையாகிய மரியாளும், பூங்கொடி
தாங்கிய தவத்தோனாகிய சூசையும், மோட்சத்திலுள்ள வானவர்
கூட்டங்களுமேயல்லாமல், இவ்வுலகில் வேறு எவரேனும் உண்டோ?