பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 563

                 4
ஏமஞ் சாலுல கிணைமனை மல்கிய கருணைத்
தாமஞ் சால்பொடு தானதி லடங்கில புரண்டு
நாமஞ் சாலருள் நாடெலாம் வெள்ளமாய் மொய்ப்ப
வாமஞ் சானில மன்னவன் றோன்றினான் புறத்தே.
 
ஏமம் சால் உலகு இணை மனை மல்கிய கருணைக்
தாமம், சால்பொடு தான் அதில் அடங்கு இல புரண்டு.
நாமம் சால் அருள் நாடு எலாம் வெள்ளமாய் மொய்ப்ப,
வாமம் சால் நில மன்னவன் தோன்றினான் புறத்தே.

     இன்பம் நிறைந்த வானுலகிற்கு இணையான அச்சிறு மனையில்
நிறைந்து நின்ற கருணையாகிய ஒளி, அதனுள் தான் அடங்கமாட்டாமல்
மிகுதியாகிப் புரண்டு, தனது திருப் பெயரில் நிறைந்து கிடந்த அருளோடு
கூடி அந்நாடு முழுவதும் வெள்ளமாய்ப் பரந்து மொய்க்குமாறு, அழகு
நிறைந்த வானுலக மன்னனாகிய திருமகன் அம்மனையின் புறத்தே வந்து
தோன்றினான்.

 
                  5
ஒளிப்ப டப்படுங் கேவண நிறைமணி யொப்ப
விளிப்ப டப்படு மெங்குறை தீர்ப்பவீங் குதித்தோன்
வெளிப்ப டப்படும் விழிமழை வழியிழி கருணைத்
துளிப்ப டப்படுஞ் சுட்டெரி துகடுய ரொருங்கே.
 
ஒளிப் படப் படும் கேவணம் நிறை மணி ஒப்ப,
இளிப் படப் படும் எம் குறை தீர்ப்ப, ஈங்கு உதித்தோன்
வெளிப் பட, படும் விழி மழை வழி இழி கருணைத்
துளிப் பட, படும் சுட்டு எரி துகள் துயர் ஒருங்கே.

     இழிவு பெறுமாறு பொருந்தியுள்ள நம் குறைகளைப் போக்கும் படி
பொருந்தியுள்ள குழியினுள், தன் ஒளி விளங்குமாறு பதிந்து நிறைந்த
மாணிக்கம் போல இவ்வுலகில் பிறந்த திருமகன், அச் சிறுமனையினின்று
வெளிப்படவே, அங்கே தோன்றும் தன் கண்களாகிய மேகத்தினின்று
வழிந்து இறங்கும் கருணையாகிய மழைத்துளி படுவதனால், மனிதரைச்
சுட்டெரிக்கும் பாவங்களும் துயரங்களும் ஒருங்கே அழியும்.