பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 564

                  6
அருளின் முற்றிய பன்னிரு வயதுள னம்பொற்
பொருளின் முற்றிய புரிசைசூ ழெருசல நகரிற்
றெருளின் முற்றிய திருமணிக் கோயிறான் செல்ல
விருளின் முற்றிய விரவறக் கதிரென வெழுந்தான்.
 
அருளின் முற்றிய பன்னிரு வயது உளன், அம் பொன்
பொருளின் முற்றிய புரிசை சூழ் எருசல நகரில்,
தெருளின் முற்றிய திரு மணிக் கோயில் தான் செல்ல,
இருளின் முற்றிய இரவு அறக் கதிர் என எழுந்தான்.

     திருமகன் அருளில் முதிர்ந்த பன்னிரண்டு வயது உள்ளவனாய்,
அழகிய பொன் முதலிய பொருட் செல்வங்கள் நிறையக் கொண்டுள்ள
மதில் சூழ்ந்த எருசலேம் நகரில், தெளிந்த ஒளி நிறைந்த அழகிய மணிகள்
பதித்த கோவிலுக்குத் தான் செல்ல விரும்பி, இருள் முதிர்ந்த இரவு
அகலுமாறு பகலவன் எழுந்தாற்போல புறப்பட்டான்.

 
                7
பூவும் வாசமும் பொதுளிய தாமமு மணியுங்
காவு நீழலுங் காயமு முயிரும்போற் பிரியா
மேவுங் கேண்மையின் மிடைந்தகைத் தாதையுந் தாயு
நீவுந் தாளினை நீங்கிலர் பின்செலச் சென்றார்.
 
பூவும், வாசமும், பொதுளிய தாமமும் மணியும்,
காவும் நீழலும், காயமும் உயிரும் போல், பிரியா
மேவும் கேண்மையின் மிடைந்த கைத்தாதையும் தாயும்,
நீவும் தாளினை நீங்கிலர், பின் செலச் சென்றார்.

     பூவும் மணமும், நிறைந்த ஒளியும் மணியும், சோலையும் நிழலும்,
உடலும் உயிரும் போல், அவனோடு பிரியாமல் பொருந்திய அன்பு நிறைந்த
வளர்ப்புத் தந்தையாகிய சூசையும் தாய் மரியாளும், தடவிய வண்ணமாய்
அவன் கால்களை விட்டு நீங்காதவராய், அவனைப் பின் தொடர்ந்து சென்ற
வண்ணமாய்த் தாமும் சென்றனர்.

     நீழல் - 'நிழல்' என்பதன் நீட்டல் விகாரம்