பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 567

உதிக்கும் ஒரு பிள்ளையின் அருளால் உனக்கு ஒளி தழைக்க, நீ இன்று
கண்டதெல்லாம் அவனே முடித்து வைப்பான்' என்று இறைவன் அன்றே
அவனுக்குச் சொன்னான்.

 
              12
அன்ன பிள்ளைநா னன்ன வேணியுநா
னின்ன நகரிடை யிறக்கு மரந்தானே
சொன்ன முறையிலீ ருலகுந் தொடர்ந்தொன்றாய்
மன்ன மகிழ்வுற மாள்வே னானென்றான்.
 
"அன்ன பிள்ளை நான்; அன்ன ஏணியும் நான்
இன்ன நகரிடை இறக்கும் மரம் தானே;
சொன்ன முறையில், ஈர் உலகும் தொடர்ந்து ஒன்றாய்
மன்ன, மகிழ்வு உற மாள்வேன் நான்" என்றான்.

     "அத்தகைய பிள்ளை நானே; அத்தகைய ஏணியும் நான் இந்த
நகரத்தில் இறக்கப் போகும் சிலுவை மரமே ஆகும்; இவ்வாறு, முன்
யாக்கோபுக்குச் சொன்ன முறைப்படி, மண்ணும் விண்ணுமாகிய இரண்டு
உலகங்களும் தொடர்ந்து ஒன்றாய் நிலை பெறுமாறு, நான் அம்மரத்தில்
மகிழ்ச்சியோடு இறப்பேன்" என்றான்.

 
                  13
வேனேர் நுழைந்தசொல் விளைத்த புண்ணிடுநீர்
போனே ரிலவயர்ந் திருவர் புலம்பியழத்
தேனேர் மலரெனச் சிறுவ னகைத்துலகம்
வானேர் மகிழ்வதா காதோ வளர்ந்தென்றான்.
 

வேல் நேர் நுழைந்த சொல் விளைத்த புண் இடு நீர்
போல், நேர் இல அயர்ந்து இருவர் புலம்பி அழ,
தேன் நேர் மலர் எனச் சிறுவன் நகைத்து, "உலகம்
வான் நேர் மகிழ்வது ஆகாதோ வளர்ந்து?" என்றான்.


     வேலுக்கு நிகராகத் தம் காதுள் நுழைந்த இச்சொல் விளைவித்த
புண்ணினின்று பொழியும் இரத்தம் போல, அவ்விருவரும் நிகரற்ற
தன்மையில் புலம்பி அழவும், சிறுவனாகிய குழந்தைநாதன்
தேன்பொருந்திய மலர்போல் புன்னகை காட்டி, "இம்மண்ணுலகம்
வானுலகிற்கு ஒப்பாக வளர்ந்து மகிழ்வது ஆகாதோ?" என்றான்.