பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 569

             16
ஏர்வழி மாதரு ளிவள்சென் றாடவர்
சேர்வழி யருந்தவன் செல்ல வேறுபோ
யோர்வழி சேர்ந்தபி னுயிரெங் கெங்கென
நீர்வழி முகங்கெட நேடி யஞ்சினார்
 
ஏர்வழி மாதருள் இவள் சென்று, ஆடவர்
சேர்வழி அருந்தவன் செல்ல, வேறு போய்,
ஓர் வழி சேர்ந்த பின், "உயிர் எங்கு, எங்கு!" என,
நீர்வழி முகம் கெட நேடி, அஞ்சினார்.

     அழகு ஒழுகும் மகளிரிடையே இம்மரியாள் சென்று, ஆண் மக்கள்
சேர்ந்து செல்லும் இடத்து வழியாக அரிய தவத்தோனாகிய சூசை
செல்லவுமாக, வேறு வேறாய்ப் போய், இருவரும் ஓரிடத்தை அடைந்தபின்,
"உயிரான மகன் எங்கே, எங்கே!" என்று கண்ணீர் பொழியும் முகம் வாடத்
தேடி, என்ன நேர்ந்ததோவென்று அஞ்சினர்.

 
                17
உன்னிடை யிலைகொலென் றிவளு மோதினாள்.
நின்னிடை யிலைகொலென் றவனு நேடினா
னென்னிடை யிலையென விருவர் சாற்றினார்
மின்னிடை யசனிபட் டெனவெந் தேங்கினார்.
 
"உன்னிடை இலைகொல்?" என்று இவளும் ஓதினாள்.
"நின்னிடை இலைகொல்?" என்று அவனும் நேடினான்.
"என்னிடை இலை" என இருவர் சாற்றினார்;
மின்இடை அசனிபட்டு என வெந்து ஏங்கினார்.

     "உன்னோடு இல்லையோ?" என்று இவளும் சொன்னாள். அவனும்,
"உன்னோடு இல்லையோ?" என்று கேட்டுத் தேடினான். "என்னோடு
இல்லை" என்று இருவரும் ஒருங்கு கூறினர்; மின்னலோடு கூடிய இடி
விழுந்தாற்போல மனம் வெதும்பி ஏங்கினர்.

     'கொல்' என்னும் இடைச்சொல் ஐயம் கருதிய வினாப்பொருளில்
நின்றது.