பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 571

செல் அகத்து அனைத்திலும் சென்று தேடினார்;
தொல் அகத்து உறவினர்த் தொடர்ந்து நாடினார்;
வல் அகத்து உலகம் ஆள் மகவைக் காண்கிலார்!
கல் அகத்தாரும் உள் கலங்க விம்பினார்:


     திருமகன் சென்றிருக்கக்கூடிய இல்லங்கள் அனைத்திலும் சென்று
தேடினர்; பழமை வாய்ந்த உறவினரிடமெல்லாம் தொடர்ந்து விசாரித்தனர்;
அதன் பின்னும், வலிமை வாய்ந்த மனத்தோடு உலகங்களை யெல்லாம்
ஆளும் மகனைக் காண இயலாதவராய், கல் மனம் படைத்தவரும் உள்ளம்
கலங்குமாறு விம்பி அழுதனர்:

 
             21
தாயுநீ சேயுநீ தவற் நாஞ்செயுந்
தீயுநீ பொறுப்பவன் சிறுவ வெம்விழி
பாயுநீ ருடனுயிர் பறிப்ப வோவிதோ
போயுநீ யறாத்துயர் புகுத்தி னாயென்பார்.
 

"தாயும் நீ; சேயும் நீ; தவறி நாம் செயும்
தீயும் நீ பொறுப்பவன்; சிறுவ, எம் விழி
பாயும் நீருடன் உயிர் பறிப்பவோ, இதோ,
போயும் நீ அறாத் துயர் புகுத்தினாய்" என்பார்.


     "எமக்குத் தாயும் நீ; மகனும் நீ; தவறி நாங்கள் செய்யும்
தீமையையும் பொறுப்பவன் நீ; சிறுவனே, எங்கள் கண்ணினின்று
பாயும் கண்ணீரோடு எங்கள் உயிரைப் பறிக்கவென்றோ, இதோ, நீ
பிரிந்து போய், நீங்காத துயரத்தை எங்கள் மனத்தில் புகுத்தினாய்"
என்பர்.

 
               22
எல்லையி லெங்கணு மிருந்த டங்கிலோ
யொல்லையில் வரும்பொழு தொன்றி லோயெலாந்
தொல்லையி லறிந்துளோய் துதைந்த வெந்துயர்
வல்லையி லறாதெமை மறந்தி யோவென்பார்.
 
"எல்லை இல் எங்கணும் இருந்து, அடங்கு இலோய்!
ஒல்லையில் வரும் பொழுது ஒன்று இலோய்! எலாம்
தொல்லையில் அறிந்து உளோய்! துதைந்த எம் துயர்
வல்லையில் அறாது, எமை மறந்தியோ?" என்பார்.