பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 574

                    26
மெய்யார் தவமே திருவின் றிருவா மென்போன் வெந்தீ
மொய்யார் வனமே முடுகி முனியா யினனோ வென்றாள்
பொய்யார் புரையே துடைப்பப் பொன்றல் காத லித்தோ
னையா ருயிரே யவனின் றளித்தான் கொல்லோ வென்றான்.
 
"மெய் ஆர் தவமே திருவின் திரு ஆம் என்போன், வெந் தீ
மொய் ஆர் வனமே முடுகி, முனி ஆயினனோ?" என்றாள்.
"பொய் ஆர் புரையே துடைப்பப் பொன்றல் காதலித்தோன்,
ஐ ஆர் உயிரே, அவன், இன்று அளித்தான் கொல்லோ?" என்றான்.

     "உண்மை நிறைந்த தவமே செல்வத்துளெல்லாம் செல்வம் என்று
சொல்லும் இயல்புள்ள அவன், கொடிய நெருப்புச் செறிந்து நிறைந்த
வனத்திற்கே விரைந்து சென்று, தானும் ஒரு முனிவனாகி விட்டானோ?"
என்றாள் மரியாள். "பொய்யோடு பொருந்திய பாவத்தைப் போக்கும்
பொருட்டு இறத்தல் விரும்பிய அவன், தனது அழகிய அரிய உயிரை
இன்றே தந்து விட்டானோ?" என்றான் சூசை.

 
                    27
தேறா வன்போன் றேறச் சிலுவை கொணர வானோ
ராறா மொய்ம்பா னானீங் காண்டோச் சியகோ லிதுவே
மாறா நலஞ்செய் யிதன்மேன் மாய்ந்தா லல்லால் வாழ்நா
ளீறா கவருந் தினனே யென்றா னன்றோ வென்றாள்.

     "தேறா அன்போன் தேற, சிலுவை கொணர வானோர்,
     'ஆறா மொய்ம்பால் நான் ஈங்கு ஆண்டு ஒச்சிய கோல் இதுவே;
     மாறா நலம் செய் இதன் மேல் மாய்ந்தால் அல்லால், வாழ் நாள்
     ஈறாக வருந்தினனே' என்றான் அன்றோ?" என்றாள்.

     "பிற வகையால் துணியாத அன்பு கொண்ட திருமகன் தளர்ச்சி
நீங்கும்படி, வானவர் ஒரு சிலுவையைக் கொணர்ந்து தனக்குக் காட்ட,
'தணியாத வலிமையால் நான் இவ்வுலகில் ஆண்டு நடத்தும் செங்கோல்
இதுவே; மாறாத நன்மையை மக்களுக்கு விளைவிக்கும் இதன்மீது