பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 576

     உன்னைப் பிள்ளையாகப் பெற்று நான் தாயாகியதே, பகைவராகிய
பேய்கள் விளைவித்த பழைய பாவப் பழியை அறுத்தெரிய நீ
இறப்பாயென்று, வேதம் காட்டிய காட்சிச் செய்திகளைக் கற்றறிந்தே
அன்றோ? பிரியாத அன்பு கொண்டவனே, நீ பிரிவதற்கு முன் என்னை
வந்தடைந்து, எனக்கு ஆசி கூறினால் தகாதோ?" என்றாள் மரியாள்.

 
                         30
இன்றோ வன்றோ வென்றோ வொருநா ளெம்மைக் காக்க
மென்றோ டொன்றொள் ளுடல்வீ வுறவேண் டியதே லிருவர்க்
கொன்றோ டொன்றொத் தனவன் புளதேல் மகனீ பிரியா
துன்றோ ளென்றோள் மரமொன் றுறலா காதோ வென்றான்.
 

"இன்றோ, அன்றோ, என்றோ ஒரு நாள், எம்மைக் காக்க,
மென் தோடு ஒன்று ஒள் உடல் வீவு உற வேண்டியதேல், இருவர்க்கு
ஒன்றோடு ஒன்று ஒத்தன அன்பு உளதேல், மகன் நீ பிரியாது,
உன் தோள் என் தோள் மரம் ஒன்று உறல் ஆகாதோ?" என்றான்.


     "இன்றோ, அன்றோ, என்றோ ஒரு நாள், எம்மை மீட்டுக் காக்கும்
பொருட்டு, மெல்லிய இதழ் போன்ற உன் ஒளி பொருந்திய உடல் மடிய
வேண்டியிருப்பின், நம் இருவர்க்குமிடையே ஒன்றோடொன்று ஒத்த அன்பு
இருக்குமாயின், மகனாகிய நீ இவ்வாறு பிரிந்து போகாமல், ஒரே சிலுவை
மரம் உன் தோளிலும் என் தோளிலும் ஒருங்கே பொருந்துதல் ஆகாதோ?"
என்றான் சூசை.

     இதே ஏக்கத்தைச் சூசை 35:54இல் தெரிவித்தல் காண்க.

 
                            31
மடவா ரிலனந் தமலிந் துமகிழ்ந் தமடந் தையெனத்
தடவா னிலுயர்ந் ததளங் கடணிந் துமொழிந் தனிரே
நடவா முறையா னடலை நரலை நடுவே யடியாள்
கடவா மழலைந் துகலங் குபகண் டிலிரோ வென்றாள்.