பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 582

     "என் உள்ளம் போல் பகல் இரவென்று இரு பொழுதும் இருண்டு
கிடக்கும் சோலையே, உன் உள்ளிடம் போல உயிர்களுக்கெல்லாம் நிழல்
செய்து, தன் நெஞ்சு ஒப்பிய அளவாக அருள் தந்து பேணும் தயவு
கொண்ட பெருமகனை, உன் நெஞ்சுக்கு ஒப்பியவனாம் தன்மை கண்டு
மறைத்து நிறுத்திக் கொண்டிருப்பாயானால், அவ்விடத்தை எனக்குக் காட்டு"
என்றான்.

 
               41
இரவிற் குன்று மிதழ்க்கஞ்ச மணிதடமே
யிரவிக் கொப்பா னிருபொழுதும் மலர்மரைத்தாள்
விரவிற் கிங்கண் வைத்துன்னை மேவியருட்
புரவித் தெண்டீம் புனலுண்டா னோவென்றான்.
 
"இரவில் குன்றும் இதழ்க் கஞ்சம் அணி தடமே,
இரவிக்கு ஒப்பான், இரு பொழுதும் மலர் மரைத் தாள்
விரவிற்கு இங்கண் வைத்து, உன்னை மேவி, அருள்
புரவி, தெண் தீம் புனல் உண்டானோ?" என்றான்.

     "இரவில் வாடும் இதழ்களைக் கொண்ட தாமரை மலர்களை அணிந்து
நிற்கும் தடாகமே, கதிரவனுக்கு ஒப்பான ஒருவன், இரு பொழுதும் மலர்ந்து
தோன்றும் தன் தாமரை மலர் போன்ற அடிகளைப் பதியுமாறு இங்கே
வைத்து, உன்னை வந்தடைந்து, அருள் பாலித்து, உனது குளிர்ந்த இனிய
நீரைப் பருகினானோ?" என்றான்.

     'புரந்து' எனற் பாலது, எதுகை இன்னோசைப் பொருட்டு, 'புரவி' என நின்றது.

 
                            42
மனமொத் துயர்மா மலையேநீ தலையிலணி
கனமொத் திருளென் மனங்கரியக் கனைத்திழியுன்
புனமொத் திழிசீர் துறந்துன்கண் புக்கனனோ
வினமொத் திலனே ரிலனோரென் பானென்றான்.
 
"மனம் ஒத்து உயர் மா மலையே, நீ தலையில் அணி
கனம் ஒத்து இருள் என் மனம் கரிய, கனைத்து இழி
உன் புனம் ஒத்து இழி சீர் துறந்து, உன் கண் புக்கனனோ,
இனம் ஒத்து இலன், நேர் இலன், ஓர் என்பான்?" என்றான்