பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 583

      "நல்லோர் மனம் போன்று உயர்ந்து நிற்கும் பெரிய மலையே,
இனத்தால் தனக்கு ஒத்தவர் இல்லாதவனாய், நிகர் இல்லாதவனாய், தான்
ஒருவனே தனக்கு நிகர் எனப்படுவான் ஒருவன், நீ உச்சியில் அணிந்துள்ள
கரிய மேகம் போன்று இருண்ட என் மனம் கரியுமாறு, ஒலித்துப்
பாய்ந்தோடும் உன் அருவியைப் போன்று விரைந்தோடும்
செல்வங்களையெல்லாம் துறந்து, உன்னுள் வந்து புகுந்து கொண்டானோ?"
என்றான்.

     'புனல்' எனற் பாலது, எதுகை இன்னோசைப் பொருட்டு, 'புனம்' என
நின்றது.

 
                          43
பொன்னார் சிறகாற் புட்கரஞ்சேர் புட்குலமே
யென்னா ருயிரே யென்னெஞ்சத் தாளரசே
யொன்னார் மனநேர் வனஞ்சேர வுற்றவழி
யன்னா னாட வறையீரோ வெனக்கென்றான்.
 
"பொன் ஆர் சிறகால் புட்கரம் சேர் புள்குலமே,
என் ஆர் உயிரே, என் நெஞ்சத்து ஆள் அரசே,
ஒன்னார் மனம் நேர் வனம் சேர உற்ற வழி,
அன்னான் நாட, அறையீரோ எனக்கு?" என்றான்.

     "பொன் போன்ற அழகிய சிறகுகளால் வானம் சேரும் திறம் கொண்ட
பறவை இனங்களே, எனக்கு அரிய உயிர் போன்றவனும் என் உள்ளத்தில்
அமர்ந்து ஆளும் அரசனுமாகிய திருமகன், பகைவர் மனம்போல் இருண்ட
வனத்தை அடையச் சென்ற வழியை, அவனை நான் தேடிக் காணும்
பொருட்டு, எனக்குச் சொல்ல மாட்டீரோ?" என்றான்.

 
                       44
குயிலே கிளியே வெண்குருகே கோவனமே
மயிலே யினைந்தென் மனங்குளிர்ப்ப வன்னான்கொள்
ளெயிலே வனமே யியம்பீரேற் போயவற்கே
துயிலே யிலநான் றுஞ்சுவனென் பீரென்றான்.
 
"குயிலே, கிளியே, வெண்குருகே, கோ அனமே,
மயிலே, இணைந்து, என் மனம் குளிர்ப்ப, அன்னான் கொள்
எயிலே வனமே இயம்பீரேல், போய், அவற்கே,
துயிலே இல நான் துஞ்சுவன் என்பீர்" என்றான்.