பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 584

     "குயிலே, கிளியே, வெண்ணிற நாரையே, அரச அன்னமே மயிலே,
எனக்கு இரங்கி, என் மனம் குளிருமாறு, அவன் மறைவிடமாகக்
கொண்டுள்ள மதிலையோ வனத்தையோ எனக்குச் சொல்ல மாட்டீராயின்,
நீங்களே போய், தூக்கமே கொள்ளாத நான் இனி இறப்பேனென்று
அவனுக்குச் சொல்லுவீர்" என்றான்.

 
                          45
கிளியோ டன்ன மழக்குயில்கள் கெழுமியழ
வளியோ டலரு மழப்புனலும் விம்மியழ
வளியோ டங்கா வருந்தியழ வளனழுவான்
களியோ டகன்றான் காவலனென் றோதையினான்.
 
கிளியோடு அன்னம் அழ, குயில்கள் கெழுமி அழ,
அளியோடு அலரும் அழ, புனலும் விம்மி அழ,
வளியோடு அம்கா வருந்தி அழ, வளன் அழுவான்,
"களியோடு அகன்றான் காவலன்" என்று ஓதையினான்.

     கிளியோடு அன்னம் அழ, குயில்கள் கூடி அழ, வண்டோடு மலரும்
அழ, ஆறும் ஏங்கி அழ, காற்றோடு அழகிய சோலையும் வருந்தி அழ,"
"என் அரசனாகிய திருமகன் மகிழ்ச்சியையெல்லாம் தன்னோடு கொண்டு
என்னைவிட்டு அகன்றான்" என்று ஓசையோடு சூசை அழுவான்.

 
                                  46
பொய்யா வரத்தோன் போய்ப்பூங்காத் திரியுங்காற்
கையா னையுங் கஞ்சமென வாடியதா
யுய்யா வண்ணத் துருகிநகர்த் தெருவெல்லா
நையா வன்பா னாடிக்கா ணாதழுவாள்.
 
பொய்யா வரத்தோன் போய்ப் பூங்காத் திரியும் கால்,
கையால் நையும் கஞ்சம் என வாடிய தாய்,
உய்யா வண்ணத்து உருகி, நகர்த்தெரு எல்லாம்
நையா அன்பால் நாடி, காணாது அழுவாள்.

     தவறாத வரங் கொண்டவனாகிய சூசை இவ்வாறு போய்ப்
பூஞ்சோலையில் அலைந்து திரிந்த வேளையில், கையால் கசக்கப்பெறும்
தாமரை மலர்போல் வாடிய தாய் மரியாள், உயிர் பிழைக்காத வண்ணமாய்
உருகி, தளராத அன்போடு அந்நகர்த் தெருக்களிலெல்லாம் தேடி,
அம்மகனைக் காணாமையால் அழுவாள்.