பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 588

               53
மடலொத்தடி வாடந டந்துசெலே
லடலுற்றென தாவியி லாண்டுறைவாய்
கடலொத்துயிர் கெட்டன காலலைகொள்
ளுடலொத்தினி நானுளை யப்பெயரேன்.
 
"மடல் ஒத்து அடி வாட நடந்து செவேல்,
அடல் உற்று, எனது ஆவியில், ஆண்டு, உறைவாய்!
கடல் ஒத்து, உயிர் கெட்டன, கால் அலை கொள்,
உடல் ஒத்து, இனி நான், உளையப் பெயர் ஏன்?

     "திறம் கொண்டு ஆட்சி புரிந்து, எனது ஆவியில் வாழ்பவனே, இதழ்
போன்று உன் கால்கள் வாடுமாறு நடந்து செல்லாதே. இனி நான், காற்றால்
அலைக்கப்படும் கடல் போலவும், உயிர் நீங்கிய உடல் போலவும்
வருந்துமாறு நீ பிரிந்து போதல் ஏன்?

     'பெயர்தல்' என்பது, விகுதி பெறாத தொழிற் பெயர் போல், 'பெயர்'
என நின்றது.

 
             54
தருமத்தழ லுந்தகு தித்தகுமோ
உருமத்தழ லுந்தழ லொப்பறநீ
மருமத்தழ லும்வதை செய்தொடிதோ
விருமத்திரி கொண்டெரி பற்றியதே.
 
"தருமத்து அழலும் தகுதி தகுமோ?
உருமத்து அழலும் தழல் ஒப்பு அற, நீ
மருமத்து அழலும் வதை செய்தொடு, இதோ,
இரு மத்திரி கொண்டு எரி பற்றியதே!

     "எரியும் தன்மை அறத்திற்குத் தகுமோ? நண்பகலில் எரிக்கும்
கதிரவனின் வெப்பமும் ஒப்பாகாதவாறு, நீ என் நெஞ்சத்தில் எரியும்
வாதனையைச் செய்தமையால், இதோ, இரண்டு துருத்தி கொண்டு ஊதியது
போல் நெருப்பு பற்றிக் கொண்டதே!

     'செய்ததொடு' என்பது, 'செய்தொடு' என விகாரமாயிற்று.