பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 589

                    55
வெண்ணைக்கிரி வெந்தன போலழுதென்
கண்ணைக்கிழி நீர்கடி தோடநெடும்
புண்ணைக்கிழி தீயையு ளூற்றியபின்
விண்ணைக்கிழி மின்னென வேகினையோ.
 
"வெண்ணைக் கிரி வெந்தன போல் அழுது, என்
கண்ணைக் கிழி நீர் கடிது ஓட, நெடும்
புண்ணைக் கிழி தீயை உள் ஊற்றிய பின்
விண்ணைக் கிழி மின் என ஏகினையோ?

     "வெண்ணெய் மலை சூடேறினாற் போல் அழுது, என் கண்ணைக்
கிழித்து வரும் கண்ணீர் விரைந்து ஓட, நெடிய புண்ணை மேலும் கிழித்துத்
தீயை அதனுள் ஊற்றிய பின், வானத்தைக் கிழித்து வரும் மின்னலைப்
போல் நீ மறைந்து சென்றாயோ?

     வெண்ணை - 'வெண்ணெய்' என்பதன் கடைப் போலி.

 
                56
இன்போதம மிழ்ந்தியி ருந்தனகா
லுன்போதவி யாதெரி யென்னுளமே
துன்போதமு றிச்சுழி யின்முழுக
வன்போதம கன்றொட கன்றனையோ.
 
"இன்பு ஓதம் அமிழ்ந்தி இருந்தன கால்
உன் போது, அவியாது எரி என் உளமே
துன்பு ஓதம் உறி, சுழியின் முழுக
அன்பு ஓதம் அகன்றொடு, அகன்றனையோ?

     "இன்பக் கடலில் நாம் மூழ்கியிருந்த காலத்தை நினைக்கும் போது,
அணையாமல் எரியும் என் உள்ளம், துன்பக் கடலைச் சேர்ந்து, அதன்
சுழியில் முழுக, நீ அன்புக் கடலை விட்டகன்றதோடு, என்னையும் விட்டகன்றாயோ?

     உன்போது - வினைத்தொகை