பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 592

                 மகனைக் கண்ட மங்கை

     - மா, கூவிளம், கூவிளம், கூவிளம்

 
               61
மீயு லாவிய மீன்முடி யாணகர்
போயு லாவிய போழ்தொரு கோதையாள்
தீயு லாவிய புண்ணெனத் தீந்துளத்
தாயு லாவிய தேதென வண்மினாள்.
 
மீ உலாவிய மீன் முடியாள், நகர்
போய் உலாவிய போழ்து, ஒரு கோதையாள்,
"தீ உலாவிய புண் எனத் தீந்த உளத் -
தாய், உலாவியது ஏது?" என, அண்மினாள்.


     வானத்து உலாவிய மீன்களைக் கொண்ட முடியை உடைய மரியாள்,
நகருக்குள் போய்த் தேடித் திரிந்தபோது, மாலை போன்ற ஒரு மங்கை, "தீ
உள்ளே புகுந்த புண் போல் எரிந்த உள்ளம் கொண்டவளே, நீ மெல்ல
நடக்கக் காரணம் ஏது?" என்று கேட்டு, அணுகினாள்.

 
                 62
தேசி கத்துயர் சேடமைந் தோதிய
தேசி கத்துயர் சேடனைத் தேடிநான்
தேசி கத்துயர் வேனெனச் செஞ்சுடர்
தேசி கத்துயர் செங்கலை யாளரோ.
 
"தேசிகத்து உயர் சேடு அமைந்து, ஓதிய
தேசிகத்து உயர் சேடனைத் தேடி நான்
தேசிகத்து அயர்வேன்" என, செஞ்சுடர்
தேசிகத்து உயர் செங் கலையாள் அரோ.

     கதிரவன் ஒளியினும் உயர்ந்த செவ்விய ஆடையை அணிந்த மரியாள்
அவளை நோக்கி, "பொன்னினும் உயர்ந்த அழகு அமைந்து புலவர் ஓதிய
புகழினும் உயர்ந்த சிறுவனைத் தேடி, நான் திசையெல்லாம் அலைந்து
சோர்வேன்" என்று சொல்ல,