பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 597

     "முற்றும் அறிய இசைவாக இனி உனக்கு என்ன சொல்வேன்?
இவ்வுலகில் தனக்கு எதிராக ஒப்பு எதுவும் இல்லாதவன் தான் ஆகையால்,
அவன் உனக்கு எதிரே வந்து நின்றால் மட்டுமே உள்ளவாறு அறிந்து
கொள்வாய்" என்று, எனக்கு அருள் செய்யும் தாய் இவற்றை அவளுக்குக்
கூறினாள்

 
                  72
இனைய கேட்டலு மின்புறக் கோதையாள்
வனைய வேட்டுறு மாண்பொடு காட்டின
வனைய னீங்குக்கண் டேனரு ளன்னைநின்
றனைய னாமவன் றானெனச் சாற்றினாள்.
 
இனைய கேட்டலும், இன்பு உற, கோதையாள்,
"வனைய வேட்டு, உறு மாண்பொடு காட்டின
அனையன் ஈங்குக் கண்டேன்; அருள் அன்னை, நின்
தனையன் ஆம் அவன் தான்" என, சாற்றினாள்.

     இவற்றை மரியாள் சொல்லக் கேட்டதும், மலர் மாலை போன்ற அம்
மங்கை, மரியாளை நோக்கி, "அருள் கொண்ட அன்னையே, நீ
புனைந்துரைக்க விரும்பி, தக்க மாண்போடு சொல்லிக் காட்டிய
அத்தகையவனை இங்கு நான் கண்டேன்; அவன் தான் உன் மகன்" என்று
சொன்னாள்.

 
             73
மண்ட ழன்றுளி வாடிய பூந்தரு
வுண்ட நல்லுயி ருற்றநீ ரொத்தசொற்
கொண்ட தன்மையி றாய்களி கூர்ந்தவற்
கண்ட தெவ்விடங் கண்டதெப் போழ்தென்றாள்.
 

மண் தழன்று உளி வாடிய பூந் தரு
உண்ட நல் உயிர் உற்ற நீர் ஒத்த சொல்
கொண்ட தன்மையில். தாய் களி கூர்ந்து, "அவன்
கண்டது எவ் இடம்? கண்டது எப்போழ்து?" என்றாள்.


     தரை வெயிலால் வெந்த போது வாடிய பூவை உடைய மரம்
மழையால் உண்ட நல்லுயிர் பெற்ற நீரைப் போன்ற இச் சொல்லைக் கேட்ட
தன்மையால், தாயாகிய மரியாள் மிக மகிழ்ந்து, "அவனை நீ கண்டது எந்த
இடத்தில்? கண்டது எப்பொழுது?" என்று வினவினாள்.