பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 598

     'அவன் கண்டது' என்ற தொடர், 'அவனைக் கண்டது' என்ற
இரண்டாம் வேற்றுமைப் பொருளில், 'அவற் கண்டது' என நின்றது.

 
                  74
மின்ன லேநனி கேளென வேட்புறுங்
கன்ன லேகடந் தின்பஞ்செய் காதல்
னென்ன லேயிரு ணேரிய காலென
தின்ன லேயற வென்மனை யெய்தினான்.
 
"மின்னலே, நனி கேள் என வேட்பு உறும்,
கன்னலே கடந்து இன்பம் செய் காதலன்,
நென்னலே, இருள் நேரிய கால், எனது
இன்னலே அற, என் மனை எய்தினான்.

     "மின்னல் போன்றவளே, நன்றாய்க்கேள். விரும்பத்தக்க கரும்பையும்
வென்று இன்பம் செய்பவனாகிய அவ்வன்பு மகன், நேற்று, இருள் தோன்றிய
வேளையில், எனது துன்பம் நீங்குமாறு, என் இல்லம் வந்தடைந்தான்.

     நென்னல் - 'நெருநல்' என்பதன் மரூஉ.

 
                   75
புரிந்த தாமமு கச்சுடர்ப் பொற்பினால்
விரிந்த தாமரைக் கையைவி ரித்துமே
லெரிந்த மீன்விழி தாழ்ந்திணை யாவருள்
சொரிந்த தானுணுந் துப்பிரந் தானரோ.
 
"புரிந்த தாம முகச் சுடர்ப் பொற்பினால்,
விரிந்த தாமரைக் கையை விரித்து, மேல்
எரிந்த மீன் விழி தாழ்ந்து, இணையா அருள்
சொரிந்த தான், உணும் துப்பு இரந்தான் அரோ.

     "விரும்பத் தக்க தன் ஒளிமுகத்து வீசிய கதிரின் அழகோடு, விரிந்த
தாமரை மலர் போன்ற தன் கையை விரித்து, வானத்தில் ஒளிர்ந்த விண்மீன்
போன்ற தன் கண்களைத் தாழ்த்தி, ஒப்பற்ற அருளைப் பொழிந்து நின்ற
அவனே, தான் உண்ணும் உணவை என்னிடம் இரந்து கேட்டான்.