பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 600

     அம்பு - நீர் என்னும் பொருள்கொண்டு அதில் தோன்றும்
தாமரைக்கு ஆயது.

 
              78
மாச றுத்தும னத்திவை யாக்கிய
வாச றுத்திணை யற்றன னையமற்
றேச றுத்தநின் றன்மக னென்றனள்
காச றுத்தசங் கேந்திய கையினாள்.
 
"மாசு அறுத்து மனத்து, இவை ஆக்கிய
ஆசு அறுத்து இணை அற்றனன், ஐயம் அற்று,
ஏசு அறுத்த நின் தன் மகன்" என்றனள்,
காசு அறுத்த சங்கு ஏந்திய கையினாள்.

     "என் மனத்திலுள்ள குற்றங்களைப் போக்கி, இவற்றையெல்லாம் செய்த
குற்றமற்றவனும் ஒப்பற்றவனுமாகிய அவனே, ஐயத்திற்கு இடமின்றி,
குறையற்ற உன் மகன் ஆவான்" என்று, குற்றமற்ற சங்கு வளையல்கள்
அணிந்த அப்பெண் கூறினாள்.

 
                 79
பருகி வாழுயிர் பற்றிய வூணெலாம்
பெருகி யீந்தபி ரானிரந் தானெனா
வுருகி யாசிய வட்குரைத் தன்னைபோய்
மருகி யாண்டிலு மைந்தனைத் தேடினாள்.
 
பருகி வாழ் உயிர் பற்றிய ஊண் எலாம்
பெருகி ஈந்த பிரான் இரந்தான் எனா
உருகி, ஆசி அவட்கு உரைத்து, அன்னை, போய்
மருகு யாண்டிலும் மைந்தனைத் தேடினாள்.

     தாயாகிய மரியாள், உண்டு வாழும் உயிரனங்கள் கைக் கொண்ட
உணவு வகைகளையெல்லாம் ஏராளமாய்த் தந்துள்ள ஆண்டவனே தன்
உணவுக்காக இரந்தானென்று அறிந்து மனம் உருகி, அப்பெண்ணுக்கு
ஆசிகூறி, அங்கிருந்து போய், அப்பக்கம் பொருந்திய இடங்களிலெல்லாம்
தன் மகனைத் தேடிப் பார்த்தாள்.

     'மருங்கு' என்பதன் இடைக்குறை 'மருகு' என வந்தது.