பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 602

ஆயவை உரைத்து, "ஈங்கு உள்ளன் ஆய், அவற் காணேன்" என்ன,
தாய், அவை வருந்திச் சாற்ற, "தமனியக் கோயில் சேர்ந்து,
தீயவை துடைக்கும் நாதன் செம்மலைக் காட்ட வேண்டின்,
நோய் அவன் நீப்பன்" என்றான், நுண் மறை வடிவம் பூண்டான்.

    தாயாகிய மரியாள், பிரிந்தது முதல் நிகழ்ந்தவற்றையெல்லாம் சொல்லி,
"அவன் இங்கே உள்ளான் எனினும், நான் அவனைக் கண்டிலேன்" என்று,
பின்னும் அவற்றையே வருத்தத்தோடு சொல்லிக்கொண்டிருக்க, நுட்பமான
வேத வடிவம் பூண்டு விளங்கிய சூசை, "பொன்மயமான கோவிலை
அடைந்து, தீயவற்றைப் போக்கும் ஆண்டவனை நம் சிறந்த மகனைக்
காட்டுமாறு வேண்டினோமாயின், அவன் நம் துன்பத்தைப் போக்குவான்"
என்றான்.

                             82
முப்பக லிவரிவ் வாறே முற்றிய துயர்கொண் டேங்க
வொப்பகல் மாட்சிப் பால னொளிமணிக் கோயி றன்னிற்
றப்பகல் மறையின் வல்லோர் சவையினுட் பலவைக் கேட்ப
வப்பகல் மூன்றும் வைகி யனைவரும் வியப்பச் செய்தான்.
 
முப் பகல் இவர் இவ்வாறே முற்றிய துயர் கொண்டு ஏங்க,
ஒப்பு அகல் மாட்சிப் பாலன், ஒளி மணிக் கோவில் தன்னில்,
தப்பு அகல் மறையின் வல்லோர் சவையினுள், பலவைக் கேட்ப,
அப் பகல் மூன்றும் வைகி, அனைவரும் வியப்பச் செய்தான்.

     மூன்று நாட்கள் இவர்கள் இவ்வாறெல்லாம் முதிர்ந்த துயரம் கொண்டு
ஏங்க, தனக்கு ஒப்பற்ற மாட்சி கொண்ட அச்சிறுவனோ, ஒளி பொருந்திய
மணிகள் பதித்த அக்கோவிலில், அம்மூன்று நாட்களும் தங்கியிருந்து,
தப்பாத வேத நூல் வல்லார் கூட்டத்தில், பலவற்றை வினவுபவனாய்
அமைந்து, அங்கிருந்த அனைவரும் வியப்படையச் செய்தான்.