பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 604

     ஒப்பற்ற ஒருவன் எனப்படும் ஆண்டவன் அதனைக் கேட்டதும்
அவர்களுக்கு இரங்கி, அவர்கள் கூறியவற்றை மறுத்து விலக்க விருப்பம்
கொண்டதும், தன்னை யார் என்று காட்டிக் கொள்ளாமல், மெல்லிய
இசையோடு ஒலிக்கும் நல்ல யாழின் இசையைக் கூட்டிய தோடும், கனி
பால் போன்ற மற்றக் குளிர்ந்த சுவைகளையும் ஒன்றாகத் திரட்டி, அவர்கள்
காதுகளில் ஊட்டியது போன்ற இனிய சொற்களால் பின்வருமாறு சொல்லத்
தொடங்கினான்:

                    திருமகன் தெளிவுரை

     - விளம், - மா, - விளம், - மா, - விளம், - விளம், - மா

 
                          85
ஊட்டரக் குண்ட பதுமம் விண்டுவப்ப வொளிச்சுட
                          ருதித்தது போன்றே
தீட்டரக் குடலி னாதனா முவப்பச் சிறுவனாய்ப் பிறந்ததுங்
                            கேட்டேன்
மீட்டரக் கொளிபோய் வருடமீ ரறுமுன் வெயிலென
                          விராவுமாய்க் கீதங்
கேட்டரற் றிடைய ரரியதோர் காட்சி கிளரொளி கண்டதுங்
                          கேட்டேன்.
 
'ஊட்டு அரக்கு உண்ட பதுமம் விண்டு உவப்ப ஒளிச் சுடர்
                              உதித்தது போன்றே,
தீட்டு அரக்கு உடலின் நாதன், நாம் உவப்ப, சிறுவனாய்ப்
                              பிறந்ததும்கேட்டேன்.
மீட்டு, அரக்கு ஒளி போய், வருடம் ஈர் அறு முன், வெயில் என
                              இராவும் ஆய், கீதம்.
கேட்டு அரற்று இடையர் அரியது ஓர் காட்சி கிளர் ஒளி
                              கண்டதும் கேட்டேன்.

     "ஊட்டிய செந்நிறத்தை உட்கொண்ட தாமரை விரிந்து மகிழுமாறு ஒளி
கொண்ட பகலவன் உதித்ததுபோல, நாமெல்லாம் மகிழுமாறு, செந்நிறம்
தீட்டிய உடலோடு ஆண்டவன் ஒரு சிறுவனாய்ப் பிறந்த செய்தியும்
கேள்விப்பட்டேன். மேலும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன், கதிரவனின்
செந்நிற ஒளி மறைந்த பின், இரவு பகல் போல் ஆகவும், ஒரு பாடலைக்
கேட்டு ஆரவாரத்தோடு சென்ற இடையர் அரியதொரு காட்சியை நிறைந்த
ஒளி நடுவே கண்டதையும் கேள்விப்பட்டேன்.