பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 614

     உருவம் கொண்டு தோன்றிய வானவர், மணம் பொருந்திய மலர்களை
மழையென மிகுதியாகப் பொழிந்து, யாழினின்றும் புல்லாங் குழலினின்றும்
பிறக்கும் அழகிய இசையோடு, இனிமையான வாய்க் குரலாலும் சூழ நின்று
மகிழ்ந்து பாடி, வானுலகத் தெருவில் நடக்கும் அழகிய விழாவே போன்று,
அரிய சிறப்போடு அம்மூவரையும் வாழ்த்தினர்.

 
                     100
விட்டிடைக் கிறுகியன் பின்ப மிக்கவர்
கட்டிடைக் காப்பியக் கவிகள் போலவு
மட்டிடைக் கமழ்மலர் மாலை போலவு
நெட்டிடைப் பழம்பதி நேடிப் போயினார்
 
விட்ட இடைக்கு இறுகி, அன்பு இன்பம் மிக்கவர்,
கட்டு இடைக் காப்பியக் கவிகள் போலவும்,
மட்டு இடைக் கமழ் மலர் மாலை போலவும்,
நெட்டு இடைப் பழம் பதி நேடிப் போயினார்.

     விட்டுப் பிரிந்த இடைவெளிக்குத் தக்கவாறு இறுகி, அன்பும்
இன்பமும் மிகுதியாகக் கொண்ட அம்மூவரும், ஒன்றோடொன்று பொருளால்
இடையே கட்டுண்ட காப்பியப் பாடல்கள் போலவும், தேனைக் கொண்டு
மணம் வீசும் மலர் மாலையின் இணைப்பே போலவும் இணைந்து, நெடுந்
தொலைவில் அமைந்த தம் பழைய நகராகிய நாசரேத்தை நாடிச் சென்றனர்.

     'விட்டிடை' என்பது தொகுத்தல் விகாரம்.

            பிரிந்த மகவைக் காண் படலம் முற்றும்.

             ஆகப் படலம் 31க்குப் பாடல்கள் 3200