பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 616

            2
காலி னாடிய கானல ராடுகள்
காலி னாடிய கான்மண மாடுமால்
பாலி நாடிய பொற்பற வைக்குலம்
பாலி னாடிய பொற்பறப் பாடுமால்.
 
காலின் ஆடிய கான் மலர் ஆடுகள்
காலின் ஆடிய கால் மணம் ஆடும் ஆல்.
பாலி நாடிய பொற் பறவைக் குலம்,
பாலின் ஆடிய பொற்பு அறப் பாடும் ஆல்.

     காற்றால் அசைந்தாடிய மணமுள்ள மலர்கள் தம்முட் பொருந்திய
தேனை உமிழ்தலால், அசைந்தாடிய காற்றும் மணம் பொருந்தி விளங்கும்.
மாலையாதலின், ஆலமரத்தை நாடிய பொன்மயமான பறவைக் கூட்டம்,
பாலிற் பொருந்திய இனிமை அழகும் கெடுமாறு பாடும்.

     இரண்டாம் அடியில் 'காலலின்' எனற் பாலது, "காலின்' என
இடைக்குறையாய் நின்றது.

 
                3
சேத கந்தரு மாசயிற் சென்றவச்
சேத கந்தரு மாசையிற் செந்தழற்
சேத கந்தருஞ் செவ்வொளி நீத்தவான்
சேத கந்தருஞ் செவ்வலர் நீர்த்ததே.
 
சேது அகம் தரும் மாசு அயில் சென்ற அச்
சேது அகம் தரும் ஆசையின், செந் தழல்
சேது அகம் தரும் செவ் ஒளி நீத்த வான்,
சேது அகம் தரும் செவ் அலர் நீர்த்ததே.

     மக்களின் மனம் விளைவிக்கும் செந்நிறமான பாவக் கறையை
அழிப்பதற்கு வேலாக வந்துதித்த ஆண்டவனின் அச்செம்மை மனத்தில்
விளையும் ஆசைபோல, செந்நிற நெருப்பின் செம்மையைத் தன்னகத்தே
கொண்டு தரும் செவ்வானத்து ஒளியைக் கதிரவன் மறைவால் இழந்த
வானம், சேற்றினிடையே வளரும் செந்தாமரை மலரின் தன்மை கொண்டு
விளங்கியது.