பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 617

     முதலடியில் 'சேது' என்பதை மாசுக்கு அடையாக மாற்றிக் கொள்க.
'சென்ற' என்பது, இங்கு 'வந்த' என்ற பொருளில் நின்றது. 'செவ்வொளி
நீத்தவான்' சேற்றுக்கு உவமையாகவும், 'செவ்வலர்' விண்மீன்களுக்கு
உருவகமாகவும் கொள்க.

 
                    4
தெண்கண் ணாடிய சந்திரஞ் சேர்வனத்
தெண்கண் ணாடிய சந்திர னின்றிமீன்
மண்கண் ணாகம லர்ந்தருட் காணியார்
மண்கண் ணாகம லர்ந்துறக் காணுமால்.
 

தெண் கள் நாடிய சந்திரம் சேர் வனத்து,
எண் கண் ஆடிய சந்திரன் இன்றி, மீன்
மண் கண்ணாக மலர்ந்து, அருட் காணியார்
மண் கண்ணாக மலர்ந்து உறக் காணும் ஆல்.


     தெளிந்த தேனை நாடிய வண்டுகள் சேர்ந்த வனத்தைப் போல
எட்டுக் கலைகள் கொண்ட விண்மதி தவிர, விண்மீன்கள் அழகிய
கண்ணாக மலர்ந்து, கருணையைத் தம் உரிமைச் சொத்தாகக் கொண்டுள்ள
அம்மூவரும் இம்மண்ணுலகிற்குக் கண்ணாக மலர்ந்து பொருந்திய
தன்மையை வியந்து நோக்கும்.

     'ஆல்' அசைநிலை. வானத்தை வனமாகவும் விண்மீன்களை
வண்டுகளாகவும் கொள்க. 'சந்திரகம்' என்ற வண்டின் பெயர்,
இடைக்குறையாய், 'சந்திரம்' என நின்றது.

 
                  5
பல்லி யங்கனி பாடவிண் ணோங்கிய
பல்லி யங்கனி பாடுவிண் ணோர்செயு
மெல்லி யங்கவி லங்குமட் பான்மையே
யெல்லி யங்கவி லங்குவிட் பான்மையே.
 
பல் இயம் கனி பாட, விண் ஒங்கிய
பல் இயம் கனி பாடு விண்ணோர் செயும்
எல் இயங்க இலங்கு மண் பான்மையே,
எல் இயங்க இலங்கு விண் பான்மையே.

     பல வகைக் கருவிகள் கனிவோடு பாடவும், விண்ணுலகில்
சிறந்தோங்கிய அந்தப் பல கருவிகளுக்கேற்ற கனிவோடு தாமும் பாடும்