பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 62

நாதன் அன்றியும், நாதன் தெரிந்த தன்
தூதன் என்ற கருணையன் துஞ்சிலாது
ஆதல் அன்பு எழுந்து ஆங்கு அவர் கண்டு அடை
சீத இன்பு இயல்பு ஈங்கு இனிச் செப்புவாம்.


      ஏரோதன் கொடுமைக்குக் குழந்தை நாதன் தப்பியதன்றியும்,
அந்நாதனே தெரிந்து கொண்ட தன் தூதன் என்ற பெருமைக்குரிய
கருணையனும் யூதேய நாட்டில் இறவாது தப்பிய தன்மையை மரியாளும்
சூசையும் அன்பு மிகுதியால் எசித்து நாட்டில் ஒரு தெய்வக் காட்சியாற்
கண்டு அடைந்த மனத்தைக் குளிர்விக்கும் இன்ப நிகழ்ச்சியை இனி இங்கே
எடுத்துக் கூறுவோம்.

            குழவிகள் வதைப் படலம் முற்றும்

             ஆகப்படலம் 25க்கு விருத்தம் 2294