பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 621

சுனைய நீலமும், கமலமோடு ஆம்பலும், துளித்தேன்
நனைய நாகமும், நாறிய கோங்கமும், நறும் பூஞ்
சினைய சாந்தமும், செண்பகமும், கனி விருந்து ஆங்கு
இனைய யாவும், இட்டு இமிழில் வந்து உறை பதி அடைந்தார்.


     தடாகத்தில் வளரும் குவளை மலர்களும், தாமரை மலர்களோடு
ஆம்பல் மலர்களும், தேன் துளியைக் கொண்ட அரும்பு விரிந்த புன்னை
மலர்களும், மணமுள்ள கோங்க மலர்களும், நறுமண மலர்களைக்
கிளைகளிற் கொண்டுள்ள சந்தனமும், செண்பக மலர்களும், இவை போன்ற
பிற மலர்களும் கனிவோடு ஆங்காங்கு விருந்து செய்ய, அம்மூவரும்
இன்பத்தோடு வந்து தம் உறைவிடமாகிய நாசரேத்தை அடைந்தனர்.

 
                              12
வேல்செய் யாகுலத் திருவர்முன் பட்டநோய் விழுங்கிச்
சால்செய் யோகையிற் றளிர்த்துள முவப்பவான் றளங்கள்
பால்செய் யாவியிற் பைந்துகி லுடுத்தொளி பரப்பிக்
கால்செய் யாவியிற் கவரிகள் கமழவீ சினரே.
 
வேல்செய் ஆகுலத்து இருவர் முன் பட்ட நோய் விழுங்கி,
சால்செய் ஓகையின் தளிர்த்து உளம் உவப்ப, வான் தளங்கள்,
பால் செய் ஆவியின் பைந்துகில் உடுத்து ஒளி பரப்பி,
கால் செய் ஆவியின் கவரிகள் கமழ வீசினரே.

     திருமகன் பிரிவால் அவ்விருவரும் முன் வேலால் விளையும்
துன்பத்திற்கு ஒப்ப அனுபவித்த துயரமெல்லாம் போக்கி, மிகுதியாய்
அமைந்த உவகையால் மனம் தளிர்த்து மகிழுமாறு, வானுலகப்
படைகளாகிய வானவர், காய்ச்சிய பாலில் எழும் ஆவிக்கு நிகரான
மெல்லாடை அணிந்து தம் ஒளியைப் பரப்பி, காற்று வழங்கும் மூச்சைப்
போல வெண்சாமரைகளை மணம் கமழ வீசி நின்றனர்.

 
                          13
எரிம ணிப்புகை யெடுத்தனர் மலர்மழை பொழிந்தா
ரரிம ணிக்குரல் யாழெடுத் துளர்ந்திசை யேற்றி
யுரிம ணிக்குர லொருப்படப் பாவிசை கூட்டி
விரிம ணிக்கதிர் விண்டிரு விழாவினை விளைத்தார்.