17 |
முற்றி வேமழற்
பாலையிற் காய்ந்தெரி முள்ளி
னெற்றி மேனறை நீலமுங் கமலமும் பூப்ப
வுற்றி யேயென வொழுக்கமொன் றில்லநா னுயர்வான்
பெற்றி யேயுனாற் பெற்றன னிதற்குமா றுளதோ. |
|
"முற்றி வேம்
அழல் பாலையில், காய்ந்து எரி முள்ளின்
நெற்றி மேல் நறை நீலமும் கமலமும் பூப்ப,
உற்றியே என, ஒழுக்கம் ஒன்று இல்ல நான், உயர் வான்
பெற்றியே உனால் பெற்றனன்; இதற்கு மாறு உளதோ? |
"நெருப்பு
முற்றி வேகும் பாலைவனத்தில், தானும் காய்ந்து
அந்நெருப்பாலும் எரியும் முட்செடியின் உச்சியில் நறுமணமுள்ள குவளை
மலரும் தாமரை மலரும் பூத்ததற்கு ஒப்பாக, நீ என்னிடம் வந்து
சேர்ந்தாயாதலால், ஒழுக்கம் ஒன்றும் இல்லாத நான், உயர்ந்த
வானுலகுக்குரிய தன்மையை உன்னால் பெற்றுக் கொண்டேன்; இதற்கு
நான் செய்யக்கூடிய கைம்மாறு ஏதேனும் உண்டோ?
18 |
உன்னைச்
சேர்ந்தநா னும்பரு ளொருவனே யானே
னென்னைச் சேர்ந்தநீ யியலுமில் லில்லனா யினையோ
தன்னைச் சேர்ந்தகாற் றாழ்வினை விளைவிதே யென்னப்
பொன்னைச் சேர்ந்தகாற் போற்றினா னன்பள வற்றான். |
|
"உன்னைச் சேர்ந்த
நான் உம்பருள் ஒருவனே ஆனேன்.
என்னைச் சேர்ந்த நீ இயலும் இல் இல்லன் ஆயினையோ?
தன்னைச் சேரந்த கால் தாழ் வினை விளைவு இதே" என்ன,
பொன்னைச் சேர்ந்த கால் போற்றினான், அன்பு அளவு
அற்றான்.
|
"உன்னை
வந்தடைந்த நான் வானவருள் ஒருவன் போல் ஆனேன்.
என்னை வந்தடைந்த நீ தகுந்த வீடுமே இல்லாதவன் ஆனாயோ? தாழ்விற்கு
உரிய தீவினை ஒருவனை வந்தடையும்போது ஏற்படும் விளைவு இதுவே
ஆகும்" என்று கூறி, அன்பில் அளவற்றவனாகிய சூசை, திருமகனின் பொன்
போன்ற கால்களைப் போற்றினான்.
|