பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 626

     "தேனை உண்டவர் கசப்பென்னும் தீமை கொண்ட வேப்பங்காயை
இன்பமென்று கொண்டு உண்ண மாட்டார். வானுலகில் அருந்திய இன்ப
வளங்களைக் கொண்டிருந்த நான், இன்பமாய் வாழ எண்ணியோ,
ஊனாலாகிய உடலை எடுத்துக் கொண்டு இவ் மண்ணுலகில் வந்து
தோன்றினேன்? வறுமைத் துன்பத்தை நானே அனுபவிக்க நாடி, உனது
இல்லத்தைத் தெரிந்தெடுத்து வந்து பிறந்தேன்.

     எனவே, தகுந்த வீடு இல்லையென்று வருந்த வேண்டியதில்லை
என்பதாயிற்று.

 
                     21
மனைசெ யுந்தகந் தேடுவர் தகவிலார் மலர்ந்த
நனைசெ யுங்கடி நறைவனத் தெழிலென நண்ணி
வினைசெ யும்பகை வீழ்த்தநான் றெரிந்தவிம் மனையே,
தனைசெ யுந்திறன் றவிர்ந்தெழுந் தகுதிகே ளென்றான்.
 
"மனை செயும் தகம் தேடுவர் தகவு இலார். மலர்ந்த
நனை செயும் கடி நறை வனத்து எழில் என நண்ணி,
வினை செயும் பகை வீழ்த்த நான் தெரிந்த இம் மனையே,
தனை செயும் திறன் தவிர்ந்து எழும் தகுதிகேள்" என்றான்:

     "தமக்கெனத் தகுதி ஒன்றும் இல்லாதவரே தாம் வாழும் வீட்டால்
வரும் பெருமையைத் தேடுவர். மலர்ந்த அரும்புகள் தரும் மணமுள்ள தேன்
பொழியும் சோலை என்று நாடி, பாவவினை செய்யும் பகையை வீழ்த்த
வென்று நான் தெரிந்து கொண்ட இவ்வீடே, அளவறுக்கும் தன்மையின்றிப்
பிற்காலத்தில் உயர்ந்தோங்கும் பெருமையை நான் சொல்லக்கேள்" என்று
பின்வருமாறு தொடர்ந்து சொன்னான்:

     இதுவும் 'புரோகிதம்' ஆயிற்று. இவ்வீடு பெறும் பெருமை பேசுவது
தொடர்பாக, முதற்கண், அது சென்று சேரும் இத்தாலிய நாடு கொண்ட
பெருமையைப் பேசுகிறான்.

                   இத்தாலிய நாடு

     - காய், - காய், - காய், - காய், - மா, - தேமா

 
                       22
சென்னாக நீர்பொழியத் தேன்பொழியும் புன்னாகந்
                          திருவிற் பூப்பக்
கன்னாக நீருமிழக் கவிநாகம் வெருண்டஞ்சக் கல்லூ
                          டூர்ந்த
கொன்னாக மொப்பமணி கொழித்தருவி பாய்ந்தோடக்
                          கொழுஞ்செய் வாய்ப்பப்
பொன்னாக மொப்பவளர் புகழித்தா லியநாட்டுப் பொலிவி
                          தன்றோ.

s