பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 628

     "மணத்தைத் தன்னிடத்துக் கொண்ட பூக்களை உடைய தாழைச்
செடியின் அடியில் உலாவும் வெண்ணிறச் சங்கு, அழகிய வயலில் ஊர்ந்து
சென்று ஒளி பொருந்திய முத்தை ஈனும். முத்து ஈன்ற வயற்கரையில்
அழகிய தடாகம் பூத்துக் குலுங்கும். அப்பூக்களில் வண்டுகள் கனிந்த
யாழொலிபோல் இரையும். அதுகண்டு மயில்கள் களிகூர்ந்து ஆடும். சுரைக்
கொடிகளைக் கொண்ட பூஞ்சோலைகள் காய்த்துக் குலுங்கும். அந்நாட்டில்
இருவகை அறமும் மூவகைச் செல்வமும் ஏழுவகை இன்பமும் ஒழுங்கோடு
கூடிய அழகிய குடிகளாகச் சிறந்து நிற்கும். இத்தாலிய நாட்டின் நிலை இது
ஆகும்.

     இருவகை அறம்: இல்லறம், துறவறம். மூவகைச் செல்வம்: அருட்
செல்வம், பொருட் செல்வம், கல்விச் செல்வம். ஏழுவகை இன்பம்: இடம்,
உணவு, உடை, அறம், கல்வி, பொருள், துணைவர் கொண்டு பெறும்
இன்பம்.

 
                        24
பொருளீன்ற பெருஞ்செல்வப் பொலிவொழிக்கும் வளம்புணரப்
                               புகன்ற நாடு
மருளீன்ற வவாவொழிப்ப வையகத்தி னானுதித்து மறையென்
                               றோதுந்
தெருளீன்ற நூலொருங்கே திருவிளக்கென் றேற்றியெலாத்
                               திசைக்குந் தானே
யருளீன்ற விளக்காகி யவனியெலா மாளுமித்தா லியநா
                               டன்றோ.
 

"பொருள் ஈன்ற பெருஞ் செல்வப் பொலிவு ஒழிக்கும் வளம்
                              புணரப் புகன்ற நாடு,
மருள் ஈன்ற அவா ஒழிப்ப வையகத்தில் நான் உதித்து, மறை
                              என்று ஓதும்
தெருள் ஈன்ற நூல் ஒருங்கே திரு விளக்கு என்று ஏற்றி, எலாத்
                              திசைக்கும் தானே
அருள் ஈன்ற விளக்கு ஆகி, அவனி எலாம் ஆளும் இத்தாலிய
                              நாடு அன்றோ.


     "பொருட் செல்வம் தந்த பெருவளத்தின் விளக்கத்தை மாய்க்கும்
அருட் செல்வத்தின் வளம் பொருந்தப் பெற்றதாக நான் குறிப்பிட்டுச்
சொன்ன நாடு, மயக்கத்தைத் தரும் ஆசையை ஒழிக்குமாறு நான்
இவ்வுலகில் வந்து தோன்றி, வேதமென்று நான் கற்பிக்கும் தெளிவு கொண்ட
நூலை முதலில் தன் நாட்டில் திருவிளக்கென்று ஒருங்கே ஏற்றி வைத்து,
அதன்பின் எல்லாத் திசைகளுக்கும் தானே தெய்வ அருளைத் தரும்
விளக்காய் அமைந்து, இவ்வாறு உலகம் முழுவதையும் ஆளும் இத்தாலிய
நாடே ஆகும்.