பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 630

                      26
பிறைதந்த கொடியுயர்த்தோர் பின்பிங்க
     ணாண்டெவரும் பெரித ழுங்க
மறைதந்த நெறிநீத்திம் மனைக்கழிவா
     மென்றிதனை வானோ ரேந்திச்
சிறைதந்த விசையொடுபோய்த்
     தெண்கடலைக் கடந்தித்தா லியநன் னாட்டி
லிறைதந்த விளக்காக மலை நெற்றி
     யிரவியைப்போ லிலங்க வுய்ப்பார்.
 

"பிறை தந்த கொடி உயர்த்தோர், பின்பு இங்கண் ஆண்டு,
                          எவரும் பெரிது அழுங்க.
மறை தந்த நெறி நீத்து, இம் மனைக்கு அழிவு ஆம் என்று,
                          இதனை வானோர் ஏந்தி,
சிறை தந்த விசையொடு போய், தெண் கடலைக் கடந்து,
                          இத்தாலிய நல் நாட்டில்,
இறை தந்த விளக்காக, மலை நெற்றி இரவியைப் போல்,
                          இலங்க உய்ப்பார்.


     "பிறை எழுதிய கொடியைத் தாங்கியவர், எல்லோரும் பெரிது
வருந்துமாறு பிற்காலத்தில் இவ் யூதேய நாட்டில் ஆட்சி புரிந்து, வேதம்
காட்டிய வழியை விட்டு விலகி, அதன்மூலம் இவ்வீட்டிற்கு அழிவு
உண்டாகுமென்று அறிந்து, வானவர் இதனை ஏந்தியெடுத்து' தம் சிறகுகள்
தந்த வேகத்தோடு பறந்து போய், தெளிந்த நீருள்ள கடலைக் கடந்து, நல்ல
இத்தாலிய நாட்டில், மலை உச்சியில் விளங்கும் கதிரவனைப் போல்,
ஆண்டவன் அமைத்துத் தந்த விளக்காக இலங்குமாறு கொண்டு சேர்ப்பர்.

     பிறைக் கொடி தாங்கியவர், அரபு நாட்டு இசுலாமியர் என்க. கடன்
- மத்தியதரைக் கடல்.

 
               27
ஓங்கியதோ ருடன்முகமோ முகக்கண்ணோ
     கண்மணியோ வொளிசெய் மார்பிற்
றூங்கியதோர் பூண்கலனோ சுடர்முடியோ
     முடிமணியோ சொல்லுந் தன்மை
நீங்கியதோர் வனப்பிவ்வில் நிலத்தெல்லை
     நிகரில்லா நேமி தன்னில்
வீங்கியதோர் பேரின்ப வீடதுவே
     மேல்வீட்டு வாயி லஃதே.