பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 632

உச்சியில் கோடிக் கொடிகள் அசைந்தாடவும், உள்ளே கோடிப்
புல்லாங்குழல்களும் வாய்க்குரல்களும் கூவிப் பாடவும், கீழே கோடி முடிகள்
தாழ்ந்து வணங்கவும், முன்னே கோடி விளக்குகள் பகல் போல் ஒளி முற்றி
மின்னவும், கோடி முரசுகள் சுற்றிலும் முழங்கவுமாக, இவ்வீட்டின் தோற்றப்
பொலிவு அந்நாட்டில் ஒப்பற்று விளங்கும்.

     'அடி' எனவும், 'தாங்கி' எனவும் குறித்தமையால் 'தூண்' என்பது
வருவித்து உரைக்கப்பட்டது. 'சேகரம்' என்பது, 'செகரம்' எனக் குறுக்கல்
விகாரமாயிற்று.

 
                   29
மிடிசென்ற வீடென்ன விருப்புடனா
     னிவட்சென்றேன் மேவி யென்றன்
அடிசென்ற வீடென்ன வாசையெழுந்
     தனைவரும்போ யவனி யெல்லாங்
குடிசென்ற வீடென்னக் கொழுமணிபொன்
     பூந்தொடைகள் குவித்துப் போற்றப்
படிசென்ற வீடென்ன வளம்பெறுமிம்
     மனையென்றான் படர்நூல் வல்லான்.
 

"மிடி சென்ற வீடு என்ன விருப்புடன் நான் இவண் சென்றேன்.
                              மேவி என் தன்
அடி சென்ற வீடு என்ன, ஆசை எழுந்து அனைவரும் போய்,
                              அவனி எல்லாம்
குடி சென்ற வீடு என்ன, கொழு மணி பொன் பூந் தொடைகள்
                              குவித்துப் போற்ற,
படி சென்ற வீடு என்ன வளம் பெறும் இம்மனை" என்றான்
                              படர்நூல் வல்லான்.


     "வறுமை அமைந்த வீடென்று நான் விருப்புடன் இங்கு வந்து
சேர்ந்தேன். என் கால்கள் விரும்பிச் சென்ற வீடு இதுவென்று மதித்து,
ஆசை மேலோங்கி, அனைவரும் போய், உலகமெல்லாம் குடி புகுந்த வீடு
இதுவென்று கருதி, வளமான மணியும் பொன்னும் பூ மாலைகளும் கொண்டு
குவித்துப் போற்றவே, இவ்வீடு மண்ணுலகில் வந்து சேர்ந்த வான்வீடு
என்னத் தக்க வளம் பெறும்" என்று, பரந்த நூலறிவெல்லாம் ஓதாது
உணர்ந்த வல்லவனாகிய குழந்தை நாதன் கூறினான்.