பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 635

செல் வழி உளத்துச் சான்றோன் செப்பிய உரைகள் கேட்ப,
எவ் வழி அனைத்தும் தாவி எல்லையைக் கடந்த காட்சி
அவ் வழி அணுகி, யாவும் அணுகு முன் முன்னு நூலோன்
மெய் வழி விதிப்ப, மென் பூ விள் என விளம்பல் உற்றான்:


     நேரிய வழியிற் செல்லும் உள்ளம் படைத்த பண்பு நிறைந்தவனாகிய
சூசை சொல்லிய சொற்களைக் கேட்டு, எவ்வகை வழிகளையும் தாண்டிக்
கால எல்லையும் கடந்த காட்சிகளை அவ்விடத்தே சென்றடைந்து,
நடப்பதற்கு முன்னே அவை யாவற்றையும் அறியும் வேத நூலோனாகிய
குழந்தை நாதன், தன்னை அடைவதற்கான மெய்யான வழியை வகுத்துக்
காட்டும் பொருட்டு, மெல்லிய பூ மலர்ந்தாற் போலப் பின் வருமாறு,
சொல்லத் தொடங்கினான்:

 
                 33
கண்கடந் தறிந்த யாவுங்
     கடந்துநர் னரூபி யாய்நின்
றெண்கடந் தேதங் கொண்ட
     விவ்வுல கனைத்துங் காத்து
விண்கடந் தெவரும் வீட்டை
     மேவுதற் குருவாய்த் தோன்றி
மண்கடந் தரசா மாறு
     வகுத்தலே கேண்மோ வென்றான்.
 
"கண் கடந்து, அறிந்த யாவும் கடந்து, நான் அரூபியாய் நின்று,
எண் கடந்து ஏதம் கொண்ட இவ் உலகு அனைத்தும் காத்து,
விண் கடந்து எவரும் வீட்டை மேவுதற்கு உருவாய்த் தோன்றி,
மண் கடந்து, அரசு ஆம் ஆறு வகுத்தலே கேள்மோ" என்றான்.

     "கண்ணால் காண்பதையும் கடந்து, அறிவால் அறிந்தவற்றையெல்லாம்
கடந்து, முன் நான் உருவமற்ற அருவப் பொருளாய் நின்று, பின்,
எண்ணிக்கையைக் கடந்து பாவங்களை அடைந்து கொண்ட இவ்வுலகம்
முழுவதையும் மீட்டுக் காத்து, மனிதர் யாவரும் வானத்தையும் கடந்து
மோட்ச வீட்டை விரும்பி அடையும் பொருட்டு உருவம் எடுத்துத் தோன்றி,
இம்மண்ணுலகைக் கடந்து விண்ணுலகம் ஏறிச் சென்று, அரசனாய் அமையும்
தன்மையை வகுத்துக் காட்டக் கேள்" என்றான்.

     'கேண்மோ' என்ற விடத்து, 'மோ' அசைநிலை.