|
"பகைவரை
வெட்டி வீழ்த்தி, பறவைக் கூட்டத்திற்கு எந்நாளும்
இனிதே விருந்தூட்டும் போரைச் செய்ய வல்லவர் பெறும் வெற்றியையே,
இவ்வுலகத்தில் வெற்றியாகக் கொள்வர்; நான் ஒருவன் மட்டுமே, யாவரும்
வருந்துதல் அற்றவராய் உய்தி பெறுமாறு வருந்தி, தெய்வீக மருந்தாய்
அமையக் கூடிய என் இரத்தத்தைச் சிந்தி இறத்தல் மூலம் வெற்றி
கொள்வேன்."
வெட்டி
வீழ்த்திய பகைவர் உடல் பறவைகளுக்கு விருந்தாய்
அமையும். 'செய்கிற்பார்' என்ற சொல்லில் இடையே நின்ற 'கில்' ஆற்றல்
உணர்த்தும் இடைச் சொல். இயேசுவின் திரு இரத்தம் பாவக் கறை
போக்கியும் ஆன்மீக பானமாய் அமைந்தும் தெய்வ மருந்தாய் (அமுதமாய்)
விளங்குகிறது.
| 38 |
என்றன னிளவ
லென்ற விவையெலாஞ் சூசை கேட்டுப்
பொன்றன னெனநீ பொன்று பொன்றிலா வெற்றி கொள்வாய்
வென்றன னென்ன வேகி விலக்கரு மிடுக்கட் பாரி
னின்றன ருறுதி நிற்ப நெறியெனோ வுரைத்தி யென்றான். |
| |
என்றனன் இளவல்,
என்ற இவை எலாம் சூசை கேட்டு,
"பொன்றனன் என நீ பொன்றுபு, ஒன்று இலா வெற்றி கொள்வாய்;
வென்றனன் என்ன ஏகி, விலக்கு அரும் இடுக்கன் பாரில்
நின்றனர், உறுதி நிற்ப நெறி எனோ? உரைத்தி" என்றான். |
சிறுவனாகிய
திருமகன் இவ்வாறு கூறினான். கூறிய இவற்றையெல்லாம்
சூசை கேட்டு, "இறந்தவன் போல நீ இறந்து, பின்னும் நிகர் ஒன்றும்
இல்லாத வெற்றியும் கொள்வாய்; அவ்வாறு வெற்றி கொண்டவனாக நீ
இவ்வுலகை விட்டுச் சென்ற பின், தவிப்பதற்கரிய துன்பம் கொண்ட
இம்மண்ணுலகில் நிலை கொண்ட மனிதர், உனது போதனையில் உறுதியாக
நிற்பதற்கு வழி யாதோ? அதனையும் சொல்வாய்" என்றான்.
'இறந்தவன்
போல' என்றது, பின் 'நிகர் ஒன்றும் இல்லாத வெற்றி'
என்று குறித்த உயிர்த்தெழுதலைக் கருதியது. 'ஏகுதல்' என்றது,
விண்ணேற்றத்தைக் கருதியது. 'இடுக்கண்' என்றது, அறநெறிக்கு முரணாக
எழும் ஆசைகளையும், அவற்றால் விளையும் பாவங்களையும் கருதியது.
|