பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 639

              போதகரும் அருட்சாதனங்களும்

     கூவிளம், கூவிளம், கூவிளம், கூவிளம் - மா, - மா, புளிமாங்காய்

 
                     39
தேன்செயு மாலையின் வாடுபு நீர்செயுந்
     திரையி னாடித் திறனில்லா
தூன்செயு மீனமுற் றெஞ்சிய தன்மையி
     லுளத்தோர் நிலையு மிலமாக்கள்
நான்செயு நல்லருள் பெற்றன ரேலவர்
     நலநிற் பதுவோ வரிதென்னத்
தான்செயு நன்முறை யின்றயை காட்டிடத்
     தனயன் மீண்டிவ் வுரை கொண்டான்.
 

"தேன் செயும் மாலையின் வாடுபு, நீர் செயும் திரையின் ஆடி,
                         திறன் இல்லாது,
ஊன் செயும் ஈனம் உற்று எஞ்சிய தன்மையின், உளத்து ஓர்
                         நிலையும் இல மாக்கள்,
நான் செயும் நல் அருள் பெற்றனரேல், அவர் நலம் நிற்பதுவோ
                         அரிது?" என்ன,
தான் செயும் நல் முறையின் தயை காட்டிட, தனயன், மீண்டு
                         இவ் உரை கொண்டான்,


     திரு மைந்தன் சூசையை நோக்கி, "தேனைப் பொழியும் மாலை போல்
வாடி நீரில் தோன்றும் அலைபோல் அசைந்தாடி, எதிர்க்கும் திறனற்று, தம்
உடல் தூண்டிச் செலுத்தும் பாவமாகிய இழிவுக்கு ஆளாகி மெலிந்த
தன்மையால், தம் உள்ளத்திலும் ஒரு நிலைப்பாடில்லாத மக்கள், நான்
வழங்கும் நல்லருளைப் பெற்றனராயின் அவர்கள் நன்மையில்
நிலைபெறுவதோ அரிது?" என்று தொடங்கி, தான் நல்ல முறையில்
செய்யவிருக்கும் இரக்கத்தின் தன்மையை அவனுக்கு எடுத்துக் காட்டுமாறு,
மீண்டும் இவ்வாறு சொல்லலானான்.

 
                 40
நூனலம் வான் பொருள் செய்நல மின்றியு
     நுனிவேல் சூழ்ந்து நிலமாளுங்
கோனல மின்றியு மீங்கெனக் கொத்தன
     குறும்பாட் டில்லோர் தமைத்தேர்ந்து