பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 642

     இவ்வேழு வரங்கள் இறைவன் அருளைப் பெறுவதற்கான
சாதனங்களாய், 'திருவருட் சாதனம்' எனப்படும் அவை பின்வரும்
பாடல்களால் அறிக.

     'உற்று' என்பது 'உறீஇ' எனச் சொல்லிசை அளபெடை பெற்றது.

 
                43
வெண்ணிறத் தூசுகொள் மாசற வெண்மதிக்
     கதிருட் டோய்த்த வினையென்னப்
புண்ணிறத் தார்புரை போக்கியுட் டேவருள்
     பொழிநீ ராடன் முதற்கீந்து
தண்ணிறத் தெய்தினு முட்சுடு மாசையிற்
     றவறி மீண்டே தளர்ந்துள்ளந்
தெண்ணிறத் தாசுகொள் ளாநிலை யாண்மைசெய்
     திருநெய்ப் பூச லிடச்செய்வேன்.
 
"வெண் நிறத் தூசு கொள் மாசு அற, வெண் மதி கதிருள்
                    தோய்ந்த வினை என்ன,
புண் நிறத்து ஆர் புரை போக்கி, உள் தே அருள் பொழி
                    நீராடல் முதற்கு ஈந்து,
தண் நிறத்து எய்தினும் உள் சுடும் ஆசையில் தவறி மீண்டே

                    தளர்ந்து உள்ளம்
தெள் நிறத்து ஆசு கொள்ளா நிலை ஆண்மை செய் திரு
                    நெய்ப் பூசல் இடச் செய்வேன்.

     "வெண்ணிற ஆடை கொண்ட அழுக்கு நீங்குமாறு, அதனை
வெண்ணிற மதியின் கதிரில் தோய்த்த செயல் போல, புண்ணின் நிறமாக
ஆன்மாவின் பிறப்பின் போதே நிறைந்துள்ள பாவத்தைப் போக்கி,
அவ்வான்மாவினுள் தெய்வ அருளைப் பொழியும் நீராடலை முதற்கண்
வழங்கி, உள்ளத்தைக் குளிர்ப்பிக்கும் தோற்றமாய் வந்து அடையினும்,
அதற்கு இடங்கொடுத்தால் அதுவே உள்ளத்தைச் சுடும் தன்மை கொண்ட
ஆசையில் பட்டுத் தவறி, மீண்டும் உள்ளம் தளர்ந்து, தான் முன்னே
கொண்ட தெளிந்த நிறத்துக்குப் பழுது ஏற்படாத வகையில் உறுதியைத்
தரும் திரு எண்ணெய் பூசுதல் வழங்கச் செய்வேன்.

     இன்று அருள்பொழி நீராடல் என்பது ஞானஸ்நானம், திருமுழுக்கு
எனவும், திருநெய்ப் பூசல் என்பது உறுதிப்பூசுதல் எனவும் கூறப்படுகின்றன.