பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 647

                      49
அன்புடைய ரென்பு மரிந்தளிப்பார் தன்னுயிரோ
டென்புடைய மெய்யெல்லா மீந்துணவென் பான்யாரே
யீய்ந்துணவென் றெவ்வுயிர்க்கு மெவ்வுணவு மீட்டியிவண்
வேய்ந்துணத்தா னுண்ணிரந்த நீயல்லால் வேறியாரே.
 

"அன்பு உடையர் என்பும் அரிந்து அளிப்பார்; தன் உயிரோடு
என்பு உடைய மெய் எல்லாம் ஈந்து, 'உண' என்பான் யாரே?
ஈய்ந்து உண என்று, எவ் உயிர்க்கும் எவ் உணவும் ஈட்டி இவண்
வேய்ந்து, உண தான் உண் இரந்த நீ அல்லால் வேறு யாரே?


     "அன்பு கொண்டவர் தம் எலும்பையும் அரிந்து பிறர்க்குக் கொடுப்பர்;
தன் உயிரோடு, எலும்பு கொண்ட உடம்பு முழுவதையுமே கொடுத்து,
'உண்ணுக' என்று சொல்லக்கூடயவன் யார்? உண்ணவென்று தந்து,
எவ்வகை உயிர்களுக்கும் எவ்வகை உணவுகளையும் சேர்த்து வைத்தபின்,
இவ்வுலக வாழ்வை மேற்கொண்டு, தான் உண்பதற்குரிய உணவை இரந்து
பெற்றுக் கொண்ட நீயே அல்லாமல், வேறு யார் அது செய்வார்?

     'அன்புடையார், என்பும் உரியர் பிறர்க்கு' என்பது குறள் (72)
ஆண்டவன் தன்னையே உணவாக ஈதல், முன் 40-ம் பாடல் நோக்கி
அறிக. அவன் உணவு இரந்தமை, முன் 31 : 75ஆம் பாடல் நோக்கி
அறிக. 'உண் இரந்த' என்ற விடத்து, 'ஊண்' என்பது, குறுக்கல் விகாரமாய்,
'உண்' என நின்றது.

 
                      50
கைம்மா றிவண்வெஃகா காமுற் றிவையெல்லா
மெய்ம்மா றெமக்களிப்ப விஞ்சருட் சென்றான்யாரே
விஞ்சருட்சென் றாசறநா மீவாழத் தானொந்து
நெஞ்சருட்சென் றீங்கிறக்கு நீயல்லால் யார்யாரே.