| 52 |
பூவது கொடியினோன்
பொலிய மீட்டொர்நா
ளாவது மாயது மொன்று மாயெலாந்
தாவது வுணர்பிரான் றந்த காட்சியை
நாவது வருந்தினு நவிலும் பான்மையோ. |
| |
பூ அது கொடியினோன்
பொலிய, மீட்டு ஓர் நாள்,
ஆவது ஆயதும் ஒன்றும் ஆய், எலாம்
தாவு அது உணர் பிரான் தந்த காட்சியை,
நாவு அது வருந்தினும் நவிலும் பான்மையோ? |
மேலும்
ஒரு நாள், பூங்கொடியைக் கொண்டுள்ள சூசை பொலிவு
கொள்ளும்படி, நிகழ்வதும் நிகழ்ந்ததும் ஒன்றே என்ற தன்மையாய்,
எல்லாவற்றையும் கடந்து அறியும் ஆண்டவன் வழங்கிய ஒரு காட்சியை,
என் நாவு எவ்வளவுதான் வருந்தி முயன்றாலும் சொல்லிக் காட்டும் தன்மை
உண்டோ?
பூவது,
தாவது, நாவது என்ற விடங்களில் 'அது' என்பது, பகுதிப்
பொருள் விகுதியாய் நின்றது.
| 53 |
மண்ணிடத்
திருளறு மாலி நாணவும்
விண்ணிடத் துலாவிவில் விளங்கு வேந்தரை
யெண்ணிட விடமுமொன் றின்றி யெண்டிசை
கண்ணிடத் தகவில கனியக் கண்டுளான். |
| |
மண்ணிடத்து இருள்
அறும் மாலி நாணவும்,
விண்ணிடத்து உலாவி, வில் விளங்கு வேந்தரை
எண்ணிட இடமும் ஒன்று இன்றி, எண் திசை
கண்ணிடத் தகவு இல, கனியக் கண்டு உளான். |
மண்ணுலகிலுள்ள
இருளைப் போக்கும் கதிரவனும் நாணும்படியாக,
வானத்தில் உலாவி, ஒளியுடன் விளங்கும் அரசரை, எண்ணிக்கை செய்ய
வழியுமில்லாத அளவிலும், எட்டுத் திக்கிலும் நாடிக் கருதும் தன்மையுள்
அடங்குதலும் இல்லாத விதத்தில், தன் கண்கள் கனியக் காணலுற்றான்.
|