| 58 |
பேரொலி
முரசொடு பிறங்கும் பல்லியத்
தாரொலி பரியொலி யதிர்கைம் மாவொலி
தேரொலி கொடியொலி தியங்கும் பூணொலி
காரொலி யொளித்தொலி கலந்தொ லித்தவே. |
| |
பேர் ஒலி முரசொடு,
பிறங்கும் பல் இயத்து
ஆர் ஒலி, பரி ஒலி, அதிர் கைம் மா ஒலி,
தேர் ஒலி, கொடி ஒலி, தியங்கும் பூண் ஒலி,
கார் ஒலி ஒளித்து ஒலி கலந்து ஒலித்தவே. |
பெரிதாய்
ஒலிக்கும் முரசுகளோடு, விளங்கும் பல வகை இசைக்
கருவிகள் முழங்கும் ஒலியும், குதிரைகளின் ஒலியும், அதிரும் யானைகளின்
ஒலியும், தேர்களின் ஒலியும், கொடிகளின் ஒலியும், விளங்கும்
அணிகலன்களின் ஒலியும், கருமேகங்களின் இடியோசையையும் மறைத்து,
ஒரே ஒலியாகக் கலந்து ஒலித்தன.
கைம்
மா - கை மா; துதிக்கையை உடைய விலங்கு: யானை
| 59 |
மீனிகர்
வெயிற்றிர ளெறிக்கு மேனியார்
வானிகர் மகிழ்வுறீஇ மகர யாழொடு
தேனிகர் தொனிக்குழல் திளைத்த வோதைசெய்
பானிக ரிசைக்கொடு விசைகள் பாடுவார் |
| |
மீன் நிகர்
வெயில் திரள் எறிக்கும் மேனியார்,
வான் நிகர் மகிழ்வு உறீஇ, மகர யாழொடு,
தேன் நிகர் தொனிக் குழல் திளைத்த ஓதை செய்
பால் நிகர் இசைக் கொடு இசைகள் பாடுவார். |
விண்மீன்களைப்
போன்று ஒளித்திரளை வீசும் மேனி கொண்ட சில
மனிதர், வானுலகிற் போன்ற மகிழ்ச்சி கொண்டு, மகர யாழோடு, தேன்
போன்ற ஒலி கொண்ட குழல்களும் கூடி ஓசை தருகின்ற பால் போன்ற
கருவி இசையோடு தாமும் கூடிக்கொண்டு, தம் வாயாலும் பாடல் பாடி
நிற்பர்.
மகர
யாழ் - சுறாமீன் வடிவாக அமைந்த யாழ். உற்று என்பது
உறீஇ எனச் சொல்லிசை அளபெடை ஆயிற்று.
|