பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 654

              62
மின்னிறத் துருச்சிலர் விரிவில் வீசிய
பொன்னிறத் துருச் சிலர் பொறிசெய் தூயழல்
நன்னிறத் துருச்சில ரலர்ந்த நாண்மல
ரின்னிறத் துருச்சில ரேந்தி யேகுவார்.
 
மின் நிறத்து உருச் சிலர், விரி வில் வீசிய
பொன் நிறத்து உருச்சிலர், பொறி செய் தூய் அழல்
நல் நிறத்து உருச் சிலர், அலர்ந்த நாள் மலர்
இன் நிறத்து உருச் சிலர் ஏந்தி ஏகுவார்.

     சிலர் மின்னலின் நிறமுள்ள வடிவத்தையும், சிலர் விரிந்த ஒளியை
வீசிய பொன்னின் நிறமுள்ள உருவத்தையும், சிலர் தீப்பொறி பறக்கும் தூய
நெருப்பின் நல்ல நிறமுள்ள உருவத்தையும், சிலர் அன்று அலர்ந்த புதிய
மலரின் இனிய நிறமுள்ள உருவத்தையும் கொண்டு செல்வர்.

 
                 63
தோட்டழ கலர்ந்தபூந் தொடைதொ டுத்தொளி
தீட்டழ கமர்ந்தபூண் டியங்கிச் செஞ்சுடர்
காட்டழ குருக்கொடு கலந்தன் னாருடன்
வீட்டழ கரிவையர் விளங்கக் கண்டுளான்.
 
தோட்டு அழகு அலர்ந்த பூந் தொடை தொடுத்து, ஒளி
தீட்டு அழகு அமர்ந்த பூண் தியங்கி, செஞ் சுடர்
காட்டு அழகு உருக் கொடு, கலந்து அன்னாருடன்,
வீட்டு அழகு அரிவையர் விளங்கக் கண்டு உளான்.


     இதழ்களின் அழகோடு மலர்ந்த பூக்களால் தொடுத்த மாலை
அணிந்து, ஒளி கொண்டு தீட்டியது போன்ற அழகு பொருந்திய
அணிகளோடு விளங்கி, கதிரவனைக் காட்டுவது போன்ற அழகிய வடிவு
கொண்டு, முற்கூறிய ஆடவரோடு தாமும் கலந்து, வீட்டிற்கு அழகாக
அமையும் மகளிரும் விளங்கித் தோன்றக் காணலானான் சூசை.