பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 655

               64
பானுரைத் தகுதியைப் பழித்த வாடையுந்
தேனுரைத் தலர்தொடை செறிந்த பூண்களு
மீனுரைத் தொளிமணி மேனி மாமையும்
யானுரைத் திணைசெய வியலும் பான்மையோ.
 
பால் நுரைத் தகுதியைப் பழித்த ஆடையும்,
தேன் நுரைத்து அலர் தொடை, செறிந்த பூண்களும்,
மீன் உரைத்து ஒளி மணி மேனி மாமையும்,
யான் உரைத்து இணைசெய இயலும் பான்மையோ?

     பால் நுரையின் தரத்தையும் பழித்த அவர்தம் ஆடையையும்,
தேனைக் கொப்பளித்து விரியும் மலர்களாகிய மாலையும், அணிந்த
அணிகளும், விண்மீனை உரைத்துப் பூசியது போன்ற ஒளி கொண்ட மணி
போன்ற மேனியின் அழகும், நான் சொல்லி ஒப்புக்காட்ட இயலும்
தன்மையதோ?

 
              65
வாவிசேர் முளரிசேர் வதன வாமமுங்
காவிசேர் வடிவுசேர் களித்த நாட்டமு
நாவிசேர் குழலுஞ்சேர்ந் திலங்கு நங்கையா
ராவிசே ரழகுசேர்த் தனுக்கஞ் சேர்க்கிலார்.
 

வாவி சேர் முளரி சேர் வதன வாமமும்,
காவி சேர் வடிவு சேர் களித்த நாட்டமும்,
நாவி சேர் குழலும் சேர்ந்து இலங்கும் நங்கையார்,
ஆவி சேர் அழகு சேர்த்து, அனுக்கம் சேர்க்கிலார்.


     தடாகத்தில் அமைந்த தாமரை மலர் போன்ற முகத்தின் அழகும்,
குவளை மலரிற் பொருந்திய வடிவத்துடன் களித்த கண்களும், புனுகு சாந்து
பூசிய கூந்தலும் கொண்டு விளங்கும் அம் மகளிர், பார்ப்பவர் உயிரைத்
தம்பால் இழுத்துச் சேர்க்கும் அழகு கொண்டிருப்பினும், காமவுணர்வால்
அவர்களுக்கு வருத்தம் செய்யார்.