| 66 |
முடிமணி துளங்கவு
மார்பின் மொய்த்துலாங்
கடிமணி விளங்கவுங் கையங் காந்தள்சூ
ழிடிமணி யிலங்கவு மெழின்மு கத்தினார்
வடிவணி யுடுவிலூர் மதிய மானுவார். |
| |
முடி மணி துளங்கவும்,
மார்பின் மொய்த்து உலாம்
கடி மணி விளங்கவும், கை அம் காந்தள் சூழ்
இடி மணி இலங்கவும், எழில் முகத்தினார்,
வடிவு அணி உடுவில் ஊர் மதியம் மானுவார |
அழகிய
முகங் கொண்ட அம் மகளிர், தாம் அணிந்த முடியிலுள்ள
மணிகள் மிளிரவும், தம் மார்புகளில் திரண்டு கிடக்கும் மாலையிலுள்ள
அழகிய மணிகள் ஒளிரவும், தம் கையாகிய அழகிய காந்தள் மலரில் சூழ
அணிந்துள்ள வளையலின் மணிகள் இலங்கவுமாக, வடிவ அழகுள்ள
விண்மீன்களினிடையே உலாவும் மதியை ஒத்திருப்பர்.
| 67 |
உந்துகேழ்
மதிய வெண்குடைக ளூர்ந்துயர்
வந்துகீ ழணிவரு மணிமு கத்தொளி
சிந்துகே ழினமணி திளைபொற் பாவையா
ரிந்துகீ ழிந்துவந் திரியல் மானுவார். |
| |
உந்து கேழ் மதிய
வெண் குடைகள் ஊர்ந்து உயர்
வந்து, கீழ் அணி வரு மணி முகத்து ஒளி
சிந்து கேழ் இன மணி திளை பொற் பாவையார்,
இந்து கீழ் இந்து வந்து இரியல் மானுவார். |
ஒளியைப்
பொழியும் மதி போன்ற வெண்ணிறமான குடைகள்
தம்மோடு ஊர்ந்து உயர வரவும், அவற்றின் கீழ் வரிசையாக வரும் தம்
அழகிய முகங்களினின்று ஒளியைப் பொழியும், பல வகை நிறமுள்ள
மணிகளை மாலையாக அணிந்து களிக்கும் பொற் பாவை போன்ற மகளிர்,
மதியின் கீழ் மதி வந்து திரிவது போல் தோன்றுவர்.
|