பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 657

               68
வன்மலை சிறைக்கொடு வான்ப றந்தெனா
மின்மலை யுருக்கொடு விளங்கு தேர்மிசை
சொன்மலை பழித்தெழீஇத் தோன்று மங்கையர்
பொன்மலை முடியுறை சுடரைப் போலுவார்.
 

வன் மலை சிறைக் கொடு வான் பறந்து எனா,
மின் மலை உருக் கொடு விளங்கு தேர் மிசை,
சொல் மலை பழித்து எழீஇத் தோன்றும் மங்கையர்,
பொன் மலை முடி உறை சுடரைப் போலுவார்.


     பெரிய மலை சிறகு கொண்டு வானத்தில் பறந்தாற் போல, மின்னல்
தவழும் மலையின் உருவங் கொண்டு விளங்கும் தேர்மேல், மலை போன்ற
சொற்களால் அமையும் ஒப்புமையெல்லாம் பழித்து எழுச்சியுடன் தோன்றும்
மகளிர், பொன் மலையின் உச்சியில் தங்கும் ஞாயிறு போல் தோன்றுவர்.

     எழுந்து என்பது எழீஇ எனச் சொல்லிசை அளபெடை பெற்றது.

 
               69
எண்டிசை யிரிந்துவந் தின்ன வாறெழில்
கொண்டிசை யரசரோ டெழிலிக் கூந்தலார்
விண்டிசை நெருக்குற மிடையக் கண்டபூஞ்
செண்டிசை கொடிநலோன் வியந்து செப்பினான்.
 
எண் திசை இரிந்து வந்து, இன்ன ஆறு, எழில்
கொண்டு இசை அரசரோடு, எழிலிக் கூந்தலார்,
விண் திசை நெருக்கு உற மிடையக் கண்ட, பூஞ்
செண்டு இசை கொடி நலோன், வியந்து, செப்பினான்:

     எட்டுத் திசைகளினின்றும் பெயர்ந்து வந்து, இவ்வாறு, அழகு
கொண்டு இசைய வந்த அரசரோடு, மேகம் போன்ற கூந்தலையுடைய
மகளிரும், வானத்தின் எத்திசையும் நெருக்கமாக வந்து கூடக் கண்ட,
பூச்செண்டே தனக்குக் கொடியாக அமைந்த நல்லவனாகிய சூசை, வியந்து
பின் வருமாறு சொன்னான்: