பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 659

                  காட்சியில் கண்ட காவலர்

      - காய், - காய், - காய், - காய், - மா, தேமா.

 
                    72
மீன்செய்த சுடரேய்க்கு மேனியொடாங் கொளிசெய்யவ்
     வேந்த ரீட்டங்
கான்செய்த மலர்மொய்க்குங் கடிநாடு பலவாண்டு
     கசடற் றிங்கண்
யான்செய்த மறைநலமோர்ந் தினிவரும்பின் காலையிறா
     மென்னைச் சேர்ந்து
வான்செய்த மறைமுறையின் மனம்வழுவா தெஞ்ஞான்றும்
     வான்வீட் டாள்வார்.
 
"மீன் செய்த சுடர் ஏய்க்கும் மேனியொடு ஆங்கு ஒளி செய்
                         அவ் வேந்தர் ஈட்டம்,
கான் செய்த மலர் மொய்க்கும் கடி நாடு பல ஆண்டு, கசடு
                         அற்று, இங்கண்
யான் செய்த மறை நலம் ஓர்ந்து, இனி வரும் பின் காலையில்
                         தாம் என்னைச் சேர்ந்து,
வான் செய்த மறை முறையின் மனம் வழுவாது, எஞ் ஞான்றும்
                         வான் வீட்டு ஆள்வார்.

     "விண்மீன் விடுத்த ஒளியை ஒக்கும் உடலோடு அங்கு ஒளி தந்து
தோன்றிய அந்த அரசர் கூட்டம், மணம் தந்த மலர்கள் மொய்த்துக்
கிடக்கும் காவலுள்ள நாடுகள் பலவற்றை ஆண்டு, குற்றமற்று விளங்கி,
இவ்வுலகில் நான் அமைத்துத் தந்த வேதத்தின் நன்மைகளை உணர்ந்து,
இனி வரவிருக்கும் எதிர் காலத்தில் தாம் என்னை அடைந்து,
வானுலகினின்று வந்த அவ்வேத முறைப்படி மனம் தவறாது நடந்து, அதன்
பயனாக, எந்நாளும் வான்வீட்டில் ஆட்சி செய்வார் ஆவர்.

     'ஈட்டம்' என்ற அஃறிணை எழுவாய், அதனுள் அமைந்த வேந்தரைக்
கருதி, 'ஆள்வர்' என உயர்திணை முடிவு கொண்டது. பின் உயர்திணை
எழுவாய் அஃறிணை முடிவு கொள்வதும் இது போல் அமைத்துக் கொள்க.