பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 662

     "தான் முன் உண்ட கதிரைக் கொப்புளித்தாற் போல மின்னும்
விருதாக வேலை முன்னே செல்லவிட்டு, இங்கு நெருங்கி நின்ற வீரர்,
போருக்கு வாய்ந்த ஒளி கொண்ட கருவிகளையுடைய பகைவர் வணங்கிப்
பணியும் வேலைத் தாமும் ஏந்திய பாவர நாட்டவர் தம் மன்னர் கூட்டம்.
பரந்த பகலவனின் கதிரை உண்ணும் தம் குடையால் பரவும் இருளைப்
போக்கும் முடியை அணிந்து அவ்விடத்துப் பகலை ஆக்குவோர், தம்முள்
தோய்ந்த கதிரை வெளிவிடும் மணிகளைப் பகைவரிடம் கவர்ந்து
கொள்ளும் சுவேசிய நாட்டை இனிதே ஆளும் அரசரைத் தொகுப்பாகக்
கொண்ட கூட்டம்.

 
                     76
செய்பரந்த மணிக்கொடிஞ்சித் திண்டேர்மீ தாங்கரிபோற்
     றிறத்த வல்லோர்
மைபரந்த நிழற்சோலை மதுமலர்கொய் தானியமாள்
     மன்னரீட்டம்
மெய்பரந்த கலன்மின்ன மீன்பரந்த விசும்புளர்போல்
     வேய்ந்த வன்னா
ரைபரந்த வெற்பருவி யதிர்ந்தரிகொய் யாச்சியநாட்
     டரச ரீட்டம்.
 
"செய் பரந்த மணிக் கொடிஞ்சித் திண் தேர்மீது ஆங்கு அரிபோல்
                                   திறத்த வல்லோர்
மை பரந்த நிழற் சோலை மது மலர் கொய் தானியம் ஆள் மன்னர்
                                   ஈட்டம்
மெய் பரந்த கலன் மின்ன, மீன் பரந்த விசும்பு உளர்போல் வேய்ந்த
                                   அன்னார்,
ஐ பரந்த வெற்பு அருவி அதிர்ந்து அரி கொய் ஆச்சிய நாட்டு
                                   அரசர் ஈட்டம்.

     "செந்நிற ஒளி பரந்த மாணிக்கம் பதித்த மொட்டுடன் கூடிய உறுதியான
தேர்களின் மீது அங்கே காணப்படும் சிங்கம் போன்று திறத்தில்
வல்ல அவர்கள் இருள் பரந்த நிழலுள்ள பூஞ்சோலைகளில் தேன் நிறைந்த
மலர்களைக் கொய்யும் தானிய நாட்டை ஆளூம் அரசர்களின் கூட்டம்.
தங்கள் உடலில் பரந்து கிடந்த அணிகலன்கள் மின்ன, விண்மீன்கள் பரந்த
வானுலகில் உள்ள வானவர் போல் தோன்றும் அவர்கள், அழகு பரந்த
மலையினின்று அருவிகள் முழங்கிப் பாய்வதனால், வயல்களில் தானியம்
அரியாகக் கொய் தெடுக்கும் ஆச்சிய நாட்டு அரசர்களின் கூட்டம்.