பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 671

     "வானத்தைத் தொட்டு அசைந்தாடும் கொடியை உடைய தேரின் மீது,
ஒளிக் கதிரை விரிக்கும் அணிகலன்கள் அணிந்து தோன்றும் அவர்கள்,
தம் நாட்டு மண்ணைத் தீண்டி உலாவும் கடலைச் சார்ந்து, வலிமை
குன்றாது விளங்கும் பிலூசீய நாட்டவர் தம் அரசர் கூட்டம். யாழைத் தடவி,
உயர்ந்த குரலில் பாடியவர்கள் தம்மைச் சூழ்ந்துவர, வானோரின் தன்மைக்கு
ஒப்பாக விளங்கும் அவர்களோ, பார்ப்பவர் கண்களைத் தீண்டி இன்பம்
சொரியும் அழகு தீட்டப் பெற்றாற் போல் தோன்றும் பவோனிய நாட்டவரை
ஆளும் கூட்டம்.

 
                    88
துப்பப்பா லுருச் சிவப்பத் தொக்கும்ப ரெனவிருதாய்ச்
     சுடர்மீன் கொண்டா
ரொப்பப்பா லுலகணிகொள் ளொளிச்செப்பாஞ் சிப்புருதீ
     வுடைய ரீட்டம்
வெப்பப்பா லொளியெறிக்கும் வெண்மணிமார் பிடைத்தூங்க
     வெயில்செய் யன்னார்
தப்பப்பாற் றீங்கனிகட் டந்துவக்குங் கான்றியதீ
     வதிப ரீட்டம்.
 
"துப்பு அப்பால் உருச் சிவப்பத் தொக்கு, உம்பர் என விருதாய்ச்
                              சுடர் மீன் கொண்டார்,
ஓப்பு அப்பால் உலகு அணி கொள் ஒளிச் செப்பு ஆம் சிப்புரு
                              தீவு உடையர் ஈட்டம்,
வெப்பு அப்பால் ஒளி எறிக்கும் வெண் மணி மார்பிடைத் தூங்க
                              வெயில் செய் அன்னார்,
தப்பு அப்பால் தீம் கனிகள் தந்து உவக்கும் கான்றிய தீவு அதிபர்
                              ஈட்டம்

     "பவளத்தினும் மேலாய்த் தம் உடல் உருவம் சிவந்து தோன்றக் கூடி,
வானவர் போல, ஒளிரும் விண்மீனை விருதாகக் கொண்டுள்ள அவர்கள்,
ஒப்புமைக்கெல்லாம் அப்பாற்பட்டவிதமாய் உலகிலுள்ள அணிகளை எல்லாம்
தன்னுள் கொண்ட ஒளி பொருந்திய செப்புப் போன்று விளங்கும்
சிப்புருத்தீவை உரிமையாகக் கொண்ட அரசர் கூட்டம். வெப்பம் தனக்கு
அப்பாற்பட ஒளி மட்டும் வீசும் வெண்ணிறமான வைர மணி மாலை தம்
மார்பில் தொங்குவதனால் ஒளியை வழங்கும் அவர்களோ, தவறுதலுக்கு
அப்பாற்பட்ட விதமாய் எப்பொழுதும் இனிய கனிகளைத் தந்து மகிழும்
கான்றிய தீவின் தலைவராகிய அரசர் கூட்டம்".