பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 676

இடத்து இடத்து, அலகு இல் நல்லோர், இறந்து, உயிர் எஞ்ச
                                         மாய்ந்து,
சுடச்சுட புதுக்கலத்தில் சுவைய பால் பொங்கல் போல,
படப்படச் சிலர், எண் இன்றிப் பலர் எதிர்த்து, உவப்பில் ஆவி
கெடக் கெடத் தந்து, வான்மேல், கேழ்முடி சூடி, நிற்பார்.


     எண்ணிக்கை இல்லாத நல்லோர், இடந்தோறும் இடந்தோறும்
மாண்டு, தம் உயிர் கெட அழியினும், சுவையுள்ள பால் புதுப் பானையில்
சூடு ஏற ஏறப் பொங்குதல் போல், முன்சிலர் இவ்வாறு இறக்க இறக்க,
பின்னும் எண்ணற்ற பலர் அச்சேவகரை எதிர்த்து நின்று, மகிழ்ச்சியோடு
தம் உயிர் கெடக் கெடத் தந்து, ஒளி பொருந்திய முடிசூடி வானுலகில்
நிற்பர்.

 
                     96
பேர்பகை யெஞ்ச வெஞ்சாப் பெருமையோர் வாய்ப்பக் கண்டு
சேர்பகை யாதென் றையா செப்புதி யென்னச் சூசை
யார்பகைக் காதை கேண்மோ வருந்தவ வென்று சொல்வா
னேர்பகை மறுப்ப நேரா நிமிர்நெடுங் காட்சி நீரான்.
 
பேர்பகை எஞ்ச, எஞ்சாப் பெருமையோர் வாய்ப்பக் கண்டு,
"சேர்பகை யாது என்று ஐயா, செப்புதி" என்னச் சூசை,
"ஆர்பகைக் காதை கேண்மோ, அருந்தவ," என்று சொல்வான்,
நேர்பகை மறுப்ப, நேரா நிமிர் நெடுங்காட்சி நீரான்:

     பெரிய பகையாக வந்த பேய்களே மெலியவும், குறையாத பெருமை
கொண்ட நல்லோர் நலமே அடையவும் கண்டு, "ஐயா, சேர வந்துள்ள
இப்பகை யாதென்றும் சொல்லுவாய்" என்று சூசை கூறவும், நேர்ந்த
பகையெல்லாம் விலக்கி ஒழிக்கும் வண்ணம், நிகரற்று விளங்கிய,
காலங்கடந்த அறிவாற்றல் உடையவனாகிய திருமகன், "நிறைந்த
இப்பகையின் கதையைச் சொல்லக்கேள்" என்று, பின்வருமாறு சொல்வான்: