துன்பத்தின்
நன்மை
-
மா, கூவிளம், - விளம், - விளம், - மா
97 |
கூவில் வந்துநான்
குணுங்கர செங்கணும் பறிப்பப்
பூவில் வந்துதா னமரெலாம் பகைத்ததிர் புலிகள்
காவில் வந்துமான் கடுத்தென மக்களு மப்பே
யேவி வந்துமா பகைவிளைந் தெங்கணு மாமால். |
|
"கூவில் வந்து
நான் குணுங்கு அரசு எங்கணும் பறிப்,
பூவில் வந்து தான், நமர் எலாம் பகைத்து, அதிர் புலிகள்
காவில் வந்து மான் கடுத்து என, மக்களும் அப்பேய்
ஏவி வந்து, மாபகை விளைந்து எங்கணும் ஆம் ஆல். |
"நான்
இவ்வுலகில் பிறந்து வந்து பேயரசை எங்கும் ஒழிக்க
முற்படவே, அப்பேய் தானும் இவ்வுலகில் வந்து, நம்மவரையெல்லாம்
பகைத்து, முழங்கும் புலிகள் காட்டில் வந்து மான்களின் மேல் சினந்து
பாய்ந்தாற்போல், மக்களுட் சிலரும் அப்பேயால் ஏவப் பெற்று வந்து,
அதனால் பெரும்பகை விளைந்து எங்கும் அமையும்.
98 |
கடைய ரென்பவர்
கசடரென் பவர்கலை கடிந்த
மடைய ரென்பவர் மறைமுறை குலந்திரு விழந்த
புடைய ரென்பவர் புரைதுய ரிழிவுநோ யொருங்கே
யுடைய ரென்பவர் தூயவென் சுருதிநூ லுடையோர். |
|
"கடையர் என்பவர்;
கசடர் என்பவர்; கலை கடிந்த
மடையர் என்பவர்; மறை முறை குலம் திரு இழந்த
புடையர் என்பவர்; புரை துயர் இழிவு நோய் ஒருங்கே
உடையர் என்பவர்; தூய என் சுருதி நூல் உடையோர்.
|
"பேயால்
ஏவப் பெற்று வந்து அம்மக்கள், என் தூய வேத நூலை
ஏற்றுக் கொண்டுள்ளவரைக் கீழ் மக்கள் என்பார்; கசடர் என்பார்;
கலைகளை விலக்கிய மடையர் என்பார்; வேத முறையும் குலவொழுக்கமும்
செல்வச் சிறப்பும் இழந்த இனத்தார் என்பார்; குற்றமும் துயரமும் இழிவும்
நோயும் ஒருங்கே உடையவர் என்பார்.
|